விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது, இராணுவ வீரர்கள் பற்றி கருத்து தெரிவித்த ஞானசார தேரரை கைது செய்து சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை நியாயமற்றதென சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் தெரிவித்தார். இராஜகிரியவில் அமைந்துள்ள ஸ்ரீசத்தர்ம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கலகொட அத்தே ஞானசார தேரரை அரசியல் கைதியைப் போன்று சித்திரித்து சில அரசியல்வாதிகள் அவரைக் கொண்டு அரசியல் நடத்துகின்றனர். சிறைச்சாலையில் அவரை சிலர் சென்று சந்திப்பதன் நோக்கம் அவரது விடுதலையை வலியுறுத்துவதற்காக அல்ல. மாறாக, இந்த விடயத்தைக் கொண்டு அரசியல் இலாபம் தேடவே முற்படுகின்றனர்.
இராணுவ வீரர்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதித்தார் எனக் குற்றஞ்சாட்டி ஞானசார தேரருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டுமெனக் கூறிய அவரும், நீதிமன்றத்திற்கு கல்லெறிந்த மேலும் சிலரும் தற்போது அமைச்சர்களாகவுள்ளனர். அவர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதியைக் கட்டுப்படுத்துகின்றனர்.
எனவே எமது நாட்டில் நீதியை நிலைநாட்டுவதில் சமத்துவம் பேணப்படு வதில்லை என்றார்.
-Vidivelli