இந்தோனேசியாவின் தீவிரப்போக்குடைய அமைப்பொன்றை சேர்ந்த மதகுருவான அபூபக்கர் பஷீரை விடுவிப்பது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் மறுபரிசீலனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2002ஆம் ஆண்டில் பாலி தீவிலுள்ள இரவு விடுதியில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 200இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியர்களாவர்.
இக் குண்டுவெடிப்பிற்கு இந்தோனேசியாவில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜமா இஸ்லாமியா அமைப்பு உரிமை கோரியது. குறித்த அமைப்பின் தலைவரான அபூபக்கர் பஷீர் கடந்த 2011ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். இவருக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது 80 வயதைத் தாண்டியுள்ள பஷீரின் உடல்நிலையை கருத்திற்கொண்டு அவரை முன்கூட்டியே பிணையில் விடுவிக்கவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எனினும் இந்த தீர்மானத்தை எதிர்ப்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்திருந்தது.
உயிரிழந்தவர்களில் அவுஸ்திரேலியர்கள் அதிகம் என்பதால் இவ்விடயத்தை மீள்பரிசீலிக்குமாறு அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் வேண்டுகோள்விடுத்தார். அதனைத் தொடர்ந்தே பஷீரை விடுவிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை மீள்பரிசீலிப்பதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது.
பஷீரின் வயது, உடல்நிலை என்பவற்றை கருத்திற்கொண்டு மனிதாபிமான அடிப்படையிலேயே அவரை விடுவிக்கத் தீர்மானித்ததாக இந்தோனேசிய ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-VIdivelli