மத்திய தரைக்கடல் பகுதியில் இரு கப்பல்கள் கவிழ்ந்த சம்பவங்களில் 170 அகதிகள் உயிரிழந்துள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகம் தெரிவித்துள்ளது.
சுமார் 117 அகதிகள் பயணித்த கப்பலொன்று லிபிய கடற்பரப்பில் மூழ்கியதாக இத்தாலியின் கடற்படை தெரிவித்துள்ளது. அதேவேளை மொரோக்கோ மற்றும் ஸ்பெய்ன் அதிகாரிகள் மேற்கு மத்தியதரைக் கடலில் காணாமற்போன கப்பலொன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்றபோது 2200 க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
53 அகதிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த முதலாவது கப்பல் மத்திய தரைக்கடலின் மேற்குப்பகுதியிலுள்ள அல்போரான் கடற்பரப்பில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இக்கப்பல் கவிழ்ந்ததன் பின்னர் உயிர் தப்பி சுமார் 24 மணிநேரங்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒருவர் காப்பாற்றப்பட்டு மொரோக்கோவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருந்தபோதிலும், கப்பல் எந்த பகுதியில் கவிழ்ந்தது என்பது குறித்தோ அதிலிருந்தவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தோ எந்த தகவலும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான இரண்டாவது கப்பல் கடந்த சனிக்கிழமையன்று லிபியாவிலிருந்து புறப்பட்டதாகவும் அந்த கப்பல் லிபியாவிலிருந்து புறப்படும்போது அதில் 120 அகதிகள் இருந்ததாகவும் விபத்தில் உயிர் பிழைத்த மூவர் தெரிவித்துள்ளதாக இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் 16 நாட்களில் மட்டும் சுமார் 4216 குடியேறிகள் இந்த கடற்பகுதியை கடந்து சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இரண்டு மடங்குக்கும் அதிகம் எனவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
-Vidivelli