மஹிந்த ராஜபக்ஷ, கோத்தா உள்ளிட்டோர் குற்றவாளிகள்
கடந்த கால அறிக்கைகள் சுட்டுகின்றன என்கிறார் ஹந்துன்நெத்தி
விசாரணை ஆணைக்குழு அறிக்கைகள் நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என்றால் அது எதிர்கால ஆணைக்குழு அறிக்கையா அல்லது கடந்த கால அறிக்கைகளையும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியுமா என ஜே.வி.பி. சபையில் கேள்வி எழுப்பியது. மஹிந்த ராஜபக் ஷ, கோத்தாபய ராஜபக் ஷ உள்ளிட்ட முக்கிய நபர்கள் குற்றவாளிகள் என கடந்தகால ஆணைக்குழு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. அவர்களைத் தண்டித்து முன்னுதாரணமாக செயற்பட்டுகாட்ட வேண்டும் என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.
விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தின்போது உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் இதன்போது குறிப்பிடுகையில்,
இன்று விசாரணை ஆணைக்குழுக்கள் மீதான இந்த விவாதத்தில் திருத்தம் செய்யும்போது இது எதிர்கால ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் பொருந்துமா என்பதை அரசாங்கம் கூற வேண்டும். இதற்கு முன்னர் பல ஆணைக்குழு அறிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு என்ன நடக்கபோகின்றன என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது. இந்த விடயத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு என்ன செய்துவிட்டது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பலமான கரங்களினால் இவை ஏன் மூடப்படுகின்றன என்ற பல கேள்விகள் எம்மத்தியில் உள்ளது. கோப் குழுவில் விஜயதாச ராஜபக் ஷ தலைவராக செயற்பட்ட காலத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் குறித்த ஊழல் குற்றம் குறித்து கண்டறிந்து விசாரணைக்குழு அறிக்கை ஒன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. அதற்கு என்ன நடந்தது. இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அன்று குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் கட்சி மாறி அமைச்சுக்களை பெற்றுக்கொண்டனர்.
எனது தலைமையிலும் கோப் குழுவின் மூலம் மத்திய வங்கி பிணைமுறி குறித்த ஊழல் அறிக்கை ஒன்றினை நாம் முன்வைத்தோம். பாராளுமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்தோம். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கும் அனுப்பப்பட்டு அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பணிப்பும் விடுக்கப்பட்டது. இன்றுவரை அறிக்கை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அப்போதைய இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தலைவரை மாற்றியதை மட்டுமே செய்தனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை இலக்கு வைத்து கொண்டுவரும் இந்த திருத்தங்கள் எதிர்கால ஆணைக்குழுவிற்கு என்றால் இதுவரை செயற்பட்ட ஆணைக்குழு விசாரணைகளுக்கு என்ன நடக்கும். பாரிய நிதி மோசடி குறித்து ஜனாதிபதி விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அந்த அறிக்கையும் உள்ளது. இது தான் இறுதி அறிக்கை. இந்த அறிக்கையில் முக்கிய நபர்கள் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விசாரணை அறிக்கையை சட்ட விசாரணைக்கு கொண்டுசெல்ல முடியுமா? இந்த அறிக்கையில் மஹிந்த ராஜபக் ஷ, கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட பலரது பெயர்கள் உள்ளன. இவர்கள் குறித்து என்ன செய்ய தீர்மானித்துள்ளீர்கள். அவன்கார்ட் ஊழலில் கோத்தாபய ராஜபக் ஷவின் பெயரும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பெயர்களும் உள்ளன. ஆகவே இந்த அறிக்கைகளும் உள்வாங்கப்பட வேண்டும். மத்திய வங்கி ஊழல் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ மீது பல குற்றங்கள் ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஆணைக்குழு தலைவர்கள் பெயர்கள் எல்லாம் உள்ளன. அதேபோல் பலரின் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுவரை கையாளப்பட்ட அறிக்கையில் பலரது பெயர்கள் உள்ளன, இவற்றுக்கு யார் நடவடிக்கை எடுப்பது. ஆணைக்குழு அறிக்கையை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியும் என்றால் அது ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை, பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை, நிதி மோசடி குறித்த ஜனாதிபதி விசேட ஆணைக்குழு அறிக்கை அனைத்துமே நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். எதிர்கால ஆணைக்குழு அறிக்கையை மட்டுமே இலக்கு வைத்து இந்த திருத்தங்கள் செய்துகொள்ளப்படும் என்றால் கடந்தகால குற்றவாளிகள் குறித்து என்ன செய்வது. இவற்றை கையாண்டு ஒரு முன்னுதாரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli