குறைந்த கட்டணத்தில் உம்றாவுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் மோசடி
அவதானமாக இருக்குமாறு ஹஜ் குழு கோரிக்கை
குறைந்த கட்டணத்தில் உம்ரா பயணத்தை ஏற்பாடு செய்வதாகக் கூறி பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றி வரும் உம்ரா முகவர்கள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கும், அரச ஹஜ் குழுவிற்கும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவ்வாறான முகவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அரச ஹஜ்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறைந்த கட்டணத்தில் உம்ரா பயணத்தை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து பணத்தைப் பெற்றுக் கொண்டு இறுதி நேரத்தில் குறிப்பிட்ட தொகையிலும் மேலதிகமாக கட்டணங்களைக் கோரி உம்ரா பயணிகளை அசெளகரியங்களுக்குள்ளாக்கிய பல உம்ரா முகவர்கள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவ்வாறான முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அரச ஹஜ்குழுவின் உறுப்பினரும், அமைச்சர் எம்.எச். ஏ.ஹலீமின் பிரத்தியேக செயலாளருமான எம்.எச்.எம். பாஹிம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உம்ரா முகவர்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
மிகவும் குறைவான உம்ரா கட்டணம் மற்றும் 10 பேருக்கு மேலான உம்ரா பதிவுகளுக்கு சன்மானங்கள் வழங்கப்படும் என விளம்பரங்கள் வெளியிடப்பட்டு இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றன.
இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்துள்ள நிலையில், சவூதி அரேபியாவில் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த கட்டணத்தில் உம்ரா பயணத்தை ஏற்பாடு செய்ய முடியாது. எனவே குறைவான கட்டணங்களை விளம்பரப்படுத்தும் உம்ரா முகவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்பு இவ்வாறான அறிவுறுத்தல்களை வழங்கும்படி பள்ளிவாசல் நிர்வாகங்களை திணைக்களம் கோரியுள்ளது. அதற்கான கடிதங்கள் பள்ளிவாசல்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.
அத்தோடு திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத பலர் உம்ரா முகவர்களாக இயங்கி உம்ராவுக்கு பயணிகளை அழைத்து செல்கிறார்கள். இவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும்படி மக்கள் வேண்டப்பட்டுள்ளனர்.
உம்ரா விசாக்கள் IATA ஏஜன்டுக்கே கிடைக்கப் பெறுவதால் ஏஜன்ட் மூலம் விசாக்கள் வழங்கப்படுவதால் இதில் கட்டுப்பாடுகளை விதிப்பதில் திணைக்களத்துக்கு இயலாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli