முஸ்லிம் குழுக்கள், தமிழ் கூட்டமைப்பினால் நாட்டுக்கு பாரிய ஆபத்து உருவாகிறது
அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவிப்பு
முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களினாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினாலும் நாட்டுக்கு பாரிய ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பனவற்றின் தேவைக்கேற்ப நாட்டை அழிவுக்குள்ளாக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது. இவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கிறோம். என சிங்களே விடுதலை முன்னணியின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.
தெஹிவளை பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற சிங்களே விடுதலை முன்னணியின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:
இன்று புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்கி நாட்டை சமஷ்டி ஆட்சிமுறைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென்றால், 1976 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் 1977 ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜயவர்தன போன்று தேர்தல் விஞ்ஞாபனமாக மக்கள் முன்வைக்கப்பட்டு பொதுத் தேர்தலில் அது வெற்றி கொள்ளப்பட வேண்டும். தேர்தலில் மக்கள் ஆணையை பெற்றிருக்க வேண்டும்.
இன்றைய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைகளுக்கமைவாக செயற்படுவதால் நாட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன.
இன்று நாட்டை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆளவில்லை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், என்.ஜி.ஓ.க்களுமே ஆட்சி செய்கின்றன.
வடக்கு முழுமையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேவைகளுக்கு அமைவாகவே ஆளப்படுகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பௌத்த குருமார்களை விரல் நீட்டி எச்சரித்திருக்கிறார்கள். வடக்கில் இயங்கிவரும் பெளத்த விகாரைகள் இந்து கோயில்களென தெரிவித்துள்ளார்கள்.
புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்குவதற்கு இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதிகள் இந்த நாட்டை ஆட்டிப்படைக்கிறார்கள் அதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கிறது.
இன்று நாட்டில் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒவ்வொரு விதமாக சட்டம் அமுல் நடாத்தப்படுகிறது. வடக்கில் ஒரு சட்டம் தெற்கில் ஒரு சட்டம். வடக்கில் கேரளா கஞ்சாவுடன் கைதான ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டினால் விடுதலை செய்யப்பட்டார். தெற்கில் ஹெல்மட் இல்லாமல் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார், அபராதம் விதிக்கப்படுகிறார். இதற்கு பொலிஸ்மா அதிபர் பதில் கூற வேண்டும் என்றார்.
-Vidivelli