வெடிபொருள் விவகாரம்: கொழும்பு எம்.பி.யொருவர் மூடி மறைப்பதற்கு முயற்சி
பியல் நிஷாந்த எம்.பி. குற்றச்சாட்டு
புத்தளம் வணாத்தவில்லு பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள் விவகாரத்தினை கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூடிமறைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அவர் யார் என்பதை வெகு விரைவில் அம்பலப்படுத்துவேன் என பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன தலைமைக் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் இன்று தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நிகழ்வுகள் மாத்திரமே இடம் பெறுகின்றன. விடுதலைப் புலிகள் காலத்தில் வடக்கு, கிழக்கில் மாத்திரமே மக்கள் அச்சத்துடன் வாழ்ந்தனர். ஆனால் இன்று நாட்டில் அனைத்துப் பிரதேசங்களிலும் வன்முறை சம்பவங்கள் பகிரங்கமாக இடம்பெறுகின்றன. பாதாள உலகக் குழுவினரது மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன. புத்தளம், வணாத்தவில்லு பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ள வெடிபொருட்கள் தொடர்பில் அரசாங்கம் மந்தகரமான முறையிலே செயற்படுகின்றது.
வெடிபொருள் விவகாரத்தின் பின்னணியில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் நிச்சயம் காணப்படும் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இவ்விடயத்தை மூடிமறைக்க கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அவர் யார் என்பதை வெகுவிரைவில் பகிரங்கப்படுத்துவோம்.
கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற இனக் கலவரங்களின் பின்னணியில் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காணப்பட்டது.
பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு மூலகாரணம் யார் என்பதை நாங்கள் பாராளுமன்றத்திலும், பொது இடங்களிலும் பகிரங்கப்படுத்தினோம். ஆனால் அரசாங்கம் அவ்விடயம் தொடர்பில் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதுரையில் வன்முறை சம்பவத்திற்கு யார் காரணம் என்ற விடயம் முழுமையாக அரசாங்கத்தினாலே மூடி மறைக்கப்பட்டுவிட்டது. இக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு எவ்விதமான நியாயமும் கிடைக்கவில்லை.
தற்போது நாட்டில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு சம்பவமும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவே காணப்படுகின்றது. பாதாள உலகக் குழுவினரது மோதல்கள் சாதாரணமாகவே இடம் பெறுகின்றன. இவ்விடயத்தில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் மீட்பு இவ்விடயங்களுக்கு விரைவில் தீர்வு காணாவிடின் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.
-VIdivelli