நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளின் ஆவணங்கள் அனைத்துமே களவாடப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் நீதியமைச்சில் கூட இல்லை என்ற அதிர்ச்சி தரும் தகவலொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகர்களின் பின்னணியில் அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புகளும் செயற்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். முல்லைத் தீவு முள்ளியவளை வித்தியானந்த மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதியினால் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடந்த நான்கு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் இவ்வாரம் முதல் புதிய உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற தீர்மானத்திலிருந்து தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் ‘போதையற்ற தேசம்’ எனும் தொனிப்பொருளில் இம்மாதம் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள், மதத்தலங்கள் என்பவற்றில் விழிப்பூட்டும் நிகழ்ச்சிகளை நடாத்துமாறு கோரப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்துடன் தொடர்புபட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி ஜனாதிபதி கடந்த வருடம் ஆலோசனை வழங்கியிருந்தார். மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதை மனித உரிமை அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் எதிர்த்தன. ஏதோ காரணத்தினால் மரண தண்டனை அமுலாக்கம் தாமதிக்கப்பட்டு வந்தது.
-ஜனாதிபதி மீண்டும் தனது நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் ஜனாதிபதி காலம் தாழ்த்தாது தனது பதவிக்காலத்திலே இதனை அமுல்படுத்த வேண்டும். அடுத்து வரும் காலங்களில் ஜனாதிபதியாக வேறொருவர் தெரிவுசெய்யப்பட்டால் மரண தண்டனை அமுல்படுத்தப்படுமா? என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. போதைப்பொருள் தொடர்பான விழிப்பூட்டல்கள் அரச அலுவலகங்கள், பிரதேச செயலகங்களிலும் இடம்பெறவுள்ளமை மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பலாம். அண்மையில் பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கிருந்து போதைப்பொருள் தடுப்பு குறித்து புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸிலிருந்து போதைப்பொருள் தடுப்புக்குழுவொன்று விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது. எனவே போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என நம்பலாம்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதுடன் மாத்திரம் போதைப்பொருள் வர்த்தகத்தை இலங்கையில் முற்றுமுழுதாக ஒழித்துவிட முடியாது.
மீண்டும் மீண்டும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பின்னணியில் இருந்து செயற்படும் அரசியல்வாதிகளும் இனங்காணப்பட வேண்டும். ஜனாதிபதி அவ்வாறான அரசியல்வாதிகளை இனங்கண்டிருந்தால் அவர்களுக்கு அமைச்சுப்பதவிகள் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். மக்களும் அவர்களுக்கு வாக்களிப்பதிலிருந்தும் தவிர்த்து புறக்கணிக்க வேண்டும்.
போதைப்பொருளிலிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்பதற்கு உலமாசபை, பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள், அஹதிய்யா பாடசாலைகளும் செயலில் இறங்க வேண்டும். இளைஞர்களும் மாணவர்களும் போதைப்பொருளற்ற சமூகத்துக்காக நெறிப்படுத்தப்பட வேண்டும். போதையற்ற தேசத்திற்கு நாமும் பங்களிப்பு செய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
-Vidivelli