அஷ்ரபின் மரணம் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தூக்கிப்பிடிக்க ஒன்றுமில்லை
முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்
- ஏ.பி.எம்.அஸ்ஹர்
தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் பெரிதாகத் தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்க ஒன்றுமே இருக்கவில்லை என முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அதில் தொடந்து கருத்துத் தெரிவிக்கையில், தலைவர் மரணித்து இன்றுடன் 18 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் சிலருக்குத் தேவைக்கேற்ப தேர்தல் காலங்களில் மட்டும் தலைவரின் ஞாபகம் வரும். தலைவரின் மரணத்தில் சந்தேகம் உண்டு என்று கூறி ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்று முதலில் கோரிக்கை விடுத்தது முஸ்லிம் காங்கிரஸே.
அந்த ஆணைக்குழுவின் அறிக்கை எனக்கு வழங்கப்பட்டது போல் அவர்களுக்கும் அது வழங்கப்பட்டிருக்கும். அந்த அறிக்கையை ஒரு நிபந்தனையுடேனே எனக்கு வழங்கினார்கள். அதாவது, வழங்கப்பட்ட அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்கக்கூடாது என்பதே அந்த நிபந்தனையாகும். அதனை மீறி நான் செயற்படவில்லை. அந்த அறிக்கையில் தலைவருக்கு வழங்கப்பட்ட ஹெலிகொப்டர் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தலைவர் பிரயாணம் செய்வதற்கு முந்திய நாள் அந்த ஹெலிகொப்டர் பழுது பார்க்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் அந்த ஹெலிகொப்டர் ஓடிப் பரீட்சித்துப் பார்க்கப்படவில்லை எனவும் அவ்வாறு பரீட்சித்துப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை அஷ்ரப் வழங்கவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், குறித்த தினத்தன்று தனக்கு ஹெலிகொப்டர் வழங்கப்பட வேண்டுமென்ற கண்டிப்பான வேண்டுகோளுக்கமைவாகவே அது அவருக்கு வழங்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுளளது.
அத்துடன் இதற்காக யாரையும் குற்றவாளியாக ஆணைக்குழு காணவில்லை. கணவனை இழந்தமைக்காக எனக்கும் அமான் அஷ்ரபுக்கும் தலைவரின் தாய்க்கும் இழப்பீட்டைப்பெற ஆணைக்குழு சிபாரிசு செய்திருந்தது. இவைதான் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் சாராம்சமாகும்.
இந்த அறிக்கை கிடைத்தவுடன் கொழும்பிலுள்ள தலைவரின் மிகவும் நெருங்கிய நட்புக்குரிய சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரிடம் சென்று இவ்வறிக்கை சம்பந்தமாக கலந்தாலோசித்தேன். அறிக்கையைப் பெற்றுக்கொண்ட அவர், இரண்டு கிழமைகளின் பின்னர் இது தொடர்பாக ஒரு முடிவைச் சொல்வதாகக் கூறினார். பின்னர் இரண்டு நாட்களிலேயே என்னுடன் தொடர்புகொண்டு பேசினார். இந்த அறிக்கையில் ஒன்றுமே இல்லை. இதற்குப் பின்னால் நீங்கள் சென்றால் உங்களது நேரமும் காலமும் மட்டுமே வீணாகும் என்றும் இதற்குப் பின்னால் எந்த நடவடிக்கைக்கும் நீங்கள் செல்ல வேண்டாமென ஆலோசனை வழங்கியதற்கமைய நான் அந்த இடத்தில் நிறுத்திக் கொண்டேன்.
எனக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளதை அறிந்துகொண்ட ஊடகவியலாளர் லஸந்த விக்ரமதுங்கவும் என்னோடு தொடர்பு கொண்டு அந்த அறிக்கையின் பிரதியைக் கோரினார். ஆனால் அவருக்குக்கூட நான் அதை வழங்கவில்லை. தற்போது சிலர் இந்த அறிக்கையை வைத்துக் கொண்டுதான் தங்களது அரசியலையே செய்து வருகின்றனர். இது வேதனைக்குரிய விடயமாகும் .
எல்லோருக்கும் அஷ்ரபின் புகைப்படம் தேவைப்படுகின்றது. இதற்கு எதிராக அவரது மனைவி என்ற வகையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனென்றால் அவர் எனது கணவராக இருந்தாலும் அவர் முஸ்லிம் மக்களின் பொதுச் சொத்தாகும். சந்தர்ப்ப அரசியலுக்காக தேர்தல் காலங்களில் தலைவரின் புகைப்படத்தை பாவிப்பது எனக்கு மனக்கவலையைத் தந்தாலும் சில நேரங்களில் எனக்கு அவை சந்தோஷத்தையும் ஏற்படுத்தியதுண்டு. நான் சிங்கப்பூருக்கான தூதுவராகக் கடமையாற்றிய நேரம் தூதுவர்களுடன் ஒரு சுற்றுலா வந்திருந்தேன். அப்போது ஒலுவிலுக்கு வரும்போது சுவரில் தலைவரின் புகைப்படமொன்று ஒட்டப்பட்டிருந்தது. அதில் தலைவர் வெள்ளை தலைப்பாகையுடனும் வெள்ளை உடுப்பும் அணிந்திருந்தார். இதனைப்பார்த்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்று முஸ்லிம் அரசியலில் இன்றைய தலைவர்கள் லீடர்கள் அல்லாது டீலர்களாகவே செயற்பட்டு வருகின்றார்கள். நான் தற்போது உள்ளூர் அரசியல் தொடர்பாக பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. மாறாக, தேசிய அரசியலில் நடை பெறுகின்றவற்றை அவதானித்து வருகின்றேன். இனி நான் நேரடி அரசியலில் ஈடுபடப்போவதில்லை.
தலைவருடைய காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு குடும்பம் போன்று செயற்பட்டு வந்தது. ஏதாவது பிரச்சினை என்றால் நானே இடைத்தரகராக நின்று தலைவருக்கு அவற்றைத் தெரியப்படுத்தி அவற்றைத் தீர்த்துவைப்பேன். சில நேரங்களில் நான் ஒரு ஆசிரியையுடைய ஸ்தானத்திலிருந்து செயற்பட்டிருக்கின்றேன். இன்று கட்சி பல கூறுகளாகப் பிரிந்து சின்னாபின்னமாகிப் போயுள்ளது.
நான் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான அபிவிருத்திகளை மேற் கொண்டேன். நான் இன, மத, மொழி பார்த்து ஒருபோதும் சேவை செய்ததில்லை. முஸ்லிம், தமிழ், சிங்கள மக்கள் என்ற வேறுபாடின்றி எல்லோருக்கும் சமமான சேவைகளையே வழங்கியுள்ளேன். இதனை அந்தந்தப் பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று பார்ப்பதனூடாகக் கண்டுகொள்ளலாம்.
சுனாமி அனர்த்தத்தின்போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் வீடுகளை இழந்த மக்களுக்காக வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பும் கடமையும் எனக்கு இருந்தது. இருப்பினும் இந்த நாட்டுக்கு வந்த அத்தனை கொடையாளிகளும் தெற்கை நோக்கியே படையெடுத்தனர். மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் சந்திரிகா அம்மையாரின் உதவியுடன் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை அம்பாறைக்கு அழைத்துச்சென்று அம்மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை செய்து கொடுத்தேன். கல்முனை, சாய்ந்தமருது போன்ற இடங்களில் வீடமைப்புத் திட்டங்கள் உட்பட பல்வேறு உதவிகளை செய்துள்ளேன்.
அம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதி என்ற வகையிலும் சிங்கள மக்களின் வாக்குகளை கணிசமானளவில் பெற்றவள் என்ற அடிப்படையிலும் சிங்கள மக்களுக்கும் எனது மனச்சாட்சிக்கு விரோதமில்லாத வகையிலும் சேவை செய்துள்ளேன். வீரமுனை, திருக்கோவில் போன்ற தமிழ் கிராமங்களிலும் சில சேவைகளைச் செய்துள்ளேன். எனது மனட்சாட்சிக்கு விரோதமாக நான் ஒரு போதும் செயற்பட்டதில்லை.
சமூக நல்லிணக்கம் என்பது இன்று இந்த நாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. இதற்கான பங்களிப்பை வழங்க நான் தயாராகவே உள்ளேன் எனவும் தெரிவித்தார்.
-Vidivelli