சூடானின் இரண்டாவது பெரிய நகரான ஒம்டுர்மன்னில் அமைந்துள்ள பாராளுமன்றத்தை நோக்கி ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சூடானிய பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.
நாடு முழுவதும் ஜனாதிபதி ஒமர் அல்–-பஷீரை பதவி விலகுமாறு கோரி போராட்டங்கள் நடத்தப்படுவதால் மேலும் புதிய ஆர்ப்பாட்டங்கள் நிகழுமென்ற அச்சம் காரணமாக அதிக எண்ணிக்கையான படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இணைய தளத்தில் இது தொடர்பான காணொலிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அக் காணொலிகளில் படையினர் தமது வாகனங்களில் பயணிப்பது பதிவாகியுள்ளன.
இந்தப் போராட்டங்களில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் மற்றும் மருந்தாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்குபற்றுகின்றனர்.
சுமார் 30 ஆண்டுகளாக பதவி வகிக்கும் பஷீர் தேர்தல் மூலமன்றி வேறு எந்த வகையிலும் தலைமைத்துவ மாற்றம் ஏற்பட மாட்டாதென வலியுறுத்தி வருகின்றார்.
உலகில் மிக நீண்டகாலம் பதவியில் இருக்கும் இவர் அடுத்த பதவிக் காலத்திற்கும் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள தேர்தலிலும் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்.
கடந்த மாதம் ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக நாட்டின் உண்மைகளைக் கண்டறியும் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதல்கள் காரணமாக குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
-Vidivelli