முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஒரு சில நடவடிக்கைகள் மிகவும் மோசமானதாகக் காணப்பட்டாலும் அவர் அரசியலமைப்பை உருவாக்கும் போது மகாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்த மதத்தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன்படியே செயற்பட்டார் என கொழும்பு புதிய கோறளை பிரதம சங்க நாயக்க தேரர் திவியாகஹ யசஸ்ஸி தேரர் தெரிவித்தார்.
என்றாலும் தற்போதைய ஆட்சியாளர்களிடம் இவ்வாறான ஒரு செயற்பாட்டைக் காணமுடியவில்லை. புதிய அரசியலமைப்பொன்று தேவையாக இருந்தால் அது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் உட்பட அனைத்து தரப்பினரதும் கருத்துகள் கேட்டறியப்படவேண்டும் எனவும் கூறினார்.
கொழும்பில் அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் தெரிவித்ததாவது,
கடந்த 11 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கையின் ஆரம்பத்தில் இலங்கை மக்களான எம்மால் இது சமர்ப்பிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கையா? இது போன்ற அரசியலமைப்பை உருவாக்குமாறு மக்கள் வேண்டிக்கொண்டார்களா?
இந்த புதிய அரசியல் அமைப்பை நாம் முழுமையாக நிராகரித்திருக்கிறோம். ஜே.ஆர். ஜயவர்தன அரசியலமைப்பை உருவாக்கியபோது மகாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்த மதத்தலைவர்களுடன் கலந்துரையாடினார். பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கினார்.
அனைத்து மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்களது கருத்துகளை வழங்கினார்கள்.
ஆனால் இன்று ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டு, அது வளர்க்கப்பட வேண்டுமென அரசியலமைப்பின் 9 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண சபைகளுக்கு முழுமையாக அனைத்து அதிகாரங்களையும் வழங்கப் போகிறார்கள். 2013 இல் வடக்கு மாகாண சபை பதவிக்கு வந்ததும் வடக்கிலுள்ள அனைத்து இராணுவ முகாம்களும் அகற்றப்படவேண்டுமென அவர்கள் சட்டமொன்றினை நிறைவேற்றிக் கொண்டார்கள். வடக்கில் அனைத்து பன்சலைகளையும் அகற்றுதல், ஜனாதிபதி நியமிக்கும் ஆளுநரல்லாது வடக்கு முதலமைச்சர் ஆளுநரை நியமிப்பது போன்ற பிரேரணைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள்.
புதிய அரசியல மைப்பின் மூலம் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களை இல்லாமற் செய்து அவரை ஒரு பொம்மையாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். புதிய அரசியலமைப்பு மகாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்த மதத்தலைவர்களை உள்ளடக்கிய குழுவொன்றினாலே உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
-Vidivelli