பெய்ரூட்டில் நடைபெற்ற அரபுலக பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி உச்சிமாநாட்டின் இறுதியில் சிரிய அகதிகளை அவர்களது தாய்நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பதை ஊக்கப்படுத்தல் என்ற தீர்மானத்திற்கு மேலதிகமாக 29 அம்ச பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கு அரபுத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
20 நாடுகள் பங்குபற்றிய இந்த உச்சிமாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்ரூட் பிரகடனம் என்ற பெயரில் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டது. அந்தக் கூட்டறிக்கையில் அரபுலக சுதந்திர வர்த்தக வலயமொன்றை உருவாக்க வேண்டும் எனவும், அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் வழங்கும் நாடுகளுக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தீர்மானத்தை வாசித்த அரபு லீக்கின் உதவிச் செயலாளர் நாயகம் ஹொஸ்ஸாம் ஸாகி, அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் துயர் துடைக்க உதவும் அதேவேளை அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ள நாடுகளுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவிகளையும் வழங்கவும் வேண்டும் என சர்வதேச மற்றும் அரபுலக உதவி வழங்கும் சமூகத்திற்கு ஞாபகமூட்டினார்.
நிகழ்வில் ஆரம்ப உரையினை நிகழ்த்திய லெபனான் ஜனாதிபதி மெக்கெய் ஒவுன், இடம்பெயர்ந்துள்ள சிரிய மக்கள் பாதுகாப்பாக மீளத் திரும்புவதை ஊக்கப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்ததோடு, அந்த முன்னெடுப்பு யுத்தத்தினால் சிதைவடைந்துள்ள நாட்டில் அரசியல் தீர்வு என்ற விடயத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படலாகாது எனவும் தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கியுள்ள லெபனான், சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அஸாத் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை மீட்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதைத் தொடர்ந்து அவர்கள் மீளத் திரும்புவது தொடர்பில் கோரிக்கையினை முன்வைத்தது. இது தொடர்பான கலந்துரையாடல் அரசியல் தீர்வுடன் தொடர்புபட்டதாக இருக்க வேண்டுமென ஏனைய நாடுகள் வலியுறுத்தின.
எதிர்வரும் மார்ச் மாதம் துனிசியாவில் இடம்பெறவுள்ள அரபு லீக் உச்சிமாநாட்டிற்கு முன்னோட்டமாக இடம்பெறும் இந்தப் பொருளாதாரம் சம்பந்தமான கூட்டம் அரசியல் பிளவுகள் மற்றும் அரபுத் தலைவர்களின் குறைந்த வருகை காரணமாக சோபையிழந்து காணப்பட்டது. பல தலைவர்கள் இறுதி நேரத்தில் தமது வருகையினை இரத்துச் செய்தனர்.
-Vidivelli