சவூதி அரேபியாவின் அரச நிறுவனமான பெண்கள் நலன்புரி மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் 500 பேரில் 49 பேர் இலங்கையர்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
சவூதி அரேபியாவிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு சில பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாலே இப்பெண்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 21 பேர் அவர்களது நாட்டிலிருந்து விமான டிக்கட்டுகளை பெற்றுக் கொள்ளும் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எஜமானர்களால் சம்பளம் வழங்கப்படாமை குறித்து முறைப்பாடுகளைச் செய்துள்ள 14 பெண்கள் இவர்களுள் அடங்குகின்றனர். சம்பள நிலுவையைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களது எஜமானர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கைப்பெண்கள் 9 பேரும் இந்த மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களில் அநேகர் சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக கைது செய்யப்பட்டவர்கள் எனவும் அவர் கூறினார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்களை பார்வையிடுவதற்கு சவூதியிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் சென்று வருவதாகவும் தேவையான சட்டநடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் இப் பெண்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கு இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli