நாட்டில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதி வாய்ந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டமையும், போதைப் பொருளுடன் தொடர்புபட்ட பாதாள உலக கோஷ்டி குழுக்களுக்கிடையிலான கொலைச் சம்பவங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
சட்ட விரோத ஆயுதங்கள் இந்தக் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாடளாவிய ரீதியில் கடந்த வருடம் 1064 சட்ட விரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவற்றுடன் சம்பந்தப்பட்ட 685 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமாகும். 2017 ஆம் ஆண்டு 781 சட்டவிரோத ஆயுதங்களே மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸார் திடீர் சிறப்பு நடவடிக்கைகள் மூலமே சட்டவிரோத ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறான திடீர் சிறப்பு நடவடிக்கைகளினால் மாத்திரம் குற்றச் செயல்களைத் தடுத்து விடமுடியாது.
சட்ட விரோத செயல்களின் பின்னணியில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தின் பின்னணியில் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அரசாங்கம் பாடசாலை மாணவர்களுக்கு நாட்டின் சட்டங்களை படிப்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. சட்டக் கல்வி ஒரு பாடமாக பாடசாலைகளில் கற்பிக்கப்படவுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.
சட்டத்தை ஒரு பாடமாக போதிப்பதன் மூலம் சட்டங்களைப் பேணும், சட்டங்களை மதிக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும் என நீதியமைச்சர் தெரிவித்துள்ள கருத்துகள் வரவேற்கத்தக்கதாகும். அவ்வாறான ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு தசாப்த காலம் தேவைப்பட்டாலும் இது சிறந்ததொரு திட்டமாகும்.
இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு சட்டத்தை ஒரு பாடமாகக் கற்பிப்பதன் மூலம் மாத்திரம் நாட்டில் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் குற்றச்செயல்களை இல்லாமற் செய்ய முடியுமா? என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.
மக்கள் நாட்டின் சட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளாமல் குற்றச் செயல்கள் காரணமாக கிடைக்கும் தண்டனைகள் பற்றி அறியாமலா குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். வீட்டை உடைத்து களவெடுக்கும் திருடர்களுக்கு அவர்கள் புரிவது குற்றச் செயல் என்று தெரியாதா? உண்மையில் குற்றச் செயல் என்று தெரிந்து கொண்டுதான் அவர்கள் இதனை செய்கிறார்கள். இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு நாட்டின் சட்டத்தைப் பற்றி கற்பிப்பதால் மாத்திரம் குற்றச் செயல்களை ஒழித்து விட முடியாது.
நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியாகக் கருதப்படும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல். இந்த ஊழலில் பேபர்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் ஊடாக பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்களைப் பெற்றுக் கொண்டார்கள். இவர்களில் அநேகர் சிரேஷ்ட சட்டத்தரணிகள். இது குற்றச் செயல்கள் என அவர்களுக்கு தெரியவில்லையா?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கூட ஒரு சட்டத்தரணியே, சட்டத்தை படித்திருந்த அவர் தனது ஆட்சிக்காலத்தில் பல சந்தர்ப்பங்களில் சட்டத்தை மீறி செயற்பட்டிருக்கிறார்.
நாட்டில் அமுலிலுள்ள சட்டம் எண்ணற்ற சந்தர்ப்பங்களில் அமைதியாக இருந்திருக்கிறது. பல கொலை வழக்குகளில் தீர்ப்புகள் கூட தசாப்தங்கள் கடந்து வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் பாடசாலைகளில் சட்டத்தை ஒரு பாடமாகப் படிப்பிப்பதனால் மாத்திரம் குற்றச் செயல்களை ஒழித்து விட முடியாது. குற்றச் செயல்களின் பின்னணியில் இருக்கும் சட்டம் படித்த அரசியல் வாதிகள் குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு முதலில் களமிறங்க வேண்டும். அவர்கள் தம்மை நாட்டுப்பற்றுள்ளவர்களாகவும் சமூக நலன் பேணுபவர்களாகவும் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
-Vidivelli