போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை
தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்கிறார் ஜனாதிபதி
சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடந்த நான்கு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் இவ்வாரம் முதல் புதிய உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று முற்பகல் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்பான கட்டமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான கட்டணமற்ற துரித தொலைபேசி இலக்கமொன்றும் இதன்போது ஜனாதிபதியினால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கமைய 1984 என்ற இலக்கத்தினூடாக இந்த தகவல்களை வழங்க முடியும்.
இங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் , இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக எனது வேண்டுகோளுக்கமைய பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதோடு, அதற்காக வழங்கக்கூடிய தொழிநுட்ப ஆலோசனைகள் தொடர்பில் கண்டறிவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் நிபுணர் குழுவொன்று வெகுவிரைவில் வருகை தரவுள்ளது.
போதைப்பொருள் பாவனை காரணமாக சீரழிவுகளுக்கு முகங்கொடுத்திருந்த பிலிப்பைன்ஸ் நாடு, அந்நாட்டு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் காரணமாக இன்று அந்த சவாலினை வெற்றிகொண்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களை நாம் நடைமுறைப்படுத்தாவிடினும் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அஞ்சி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மேற்கொண்ட தீர்மானங்களிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.
போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு எதிரான தீவிர தீர்மானங்களுக்கு எதிராக சில மனித உரிமை அமைப்புக்கள் குரலெழுப்பி வருகின்ற போதும், போதைப்பொருட்களால் ஏற்படும் அழிவு காரணமாக நாட்டிற்கும் மக்களுக்கும் எதிர்கால சமுதாயத்திற்கும் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த அழிவிற்கு அவர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் .
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பாக மட்டுமன்றி அக்கடத்தல் நடவடிக்கைகளுக்கு பின்னணியில் செயற்படும் தரப்பினர் தொடர்பான தகவல்களையும் நான் நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் கீழான பிரதான செயற்திட்டமாக ஜனவரி 21 முதல் 25 வரை போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வட மாகாண பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இன்றைய காலைக் கூட்டத்தின்போது போதைப்பொருள் பற்றிய உறுதி மொழியை வழங்கியதன் பின்னரே போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.
ஒட்டுமொத்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டத்தில் மாணவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கமைய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 21ஆம் திகதி போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விழிப்பூட்டும் செயலமர்வுகள் வகுப்பறைகளில் மேற்கொள்ளப்பட்டதுடன், 22ஆம் திகதி பெற்றோர்களை பாடசாலைக்கு வரவழைத்து போதைப்பொருள் தடுப்பு பற்றி விழிப்புணர்வூட்டும் செயலமர்வுகள், 23ஆம் திகதி போதைப்பொருள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் பற்றிய தெளிவுபடுத்தும் செயலமர்வுகளும் இடம்பெறவுள்ளன.
ஜனவரி 24ஆம் திகதி போதைப்பொருள் தொடர்பில் அரசியல் பிரதிநிதிகளை தெளிவூட்டும் செயலமர்வுகளும், ஜனவரி 25ஆம் திகதி ஊடகங்களின் வாயிலாக பாடசாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பிலான தகவல்களை வழங்கும் நிகழ்வுகளும், ஜனவரி 26ஆம் திகதி தனியார் தொண்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் உள்ளடக்கிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. அத்துடன் ஜனவரி 27ஆம் திகதி வணக்கஸ்தலங்கள் மற்றும் அறநெறி பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்கள் நடைபெறவுள்ளன.
தொடர்ந்தும் ஜனாதிபதி இங்கு கருத்து வெளியிடுகையில், சமூகத்திற்கு செய்திகளைக் கொண்டு செல்லும் சிறந்த தூதுவர்களை பாடசாலை மாணவர்களேயாவர். இதனால் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின்போது பாடசாலை மாணவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியமாகும் என்றார்.
இந் நிகழ்வின்போது, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 பாடசாலைகளின் புனர் நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்ப செலவுகளுக்கான நிதியை வழங்குதல், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லாத 13 பாடசாலைகளுக்கு குடிநீர் வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டன.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த சுமார் 264 ஏக்கர் தனியார் காணிகளும் அரசாங்கத்தின் கீழ் இருந்த நான்கு பண்ணைகளுக்குச் சொந்தமான 1099 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கான சான்றுப் பத்திரங்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவால் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி குறித்த ஆவணங்களை மாவட்ட செயலாளர்களிடம் கையளித்தார்.
அமைச்சர்களாகிய தயா கமகே, ரிஷாட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
-Vidivelli