முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம்

0 885
  • எஸ்.றிபான்

புதிய அரசியலமைப்புப் பற்றிய கதைகள் மீண்டும் இலங்கை அரசியலில் சூடுபிடித்துள்ளது. இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் யாப்பின் மூலமாக தீர்வு காணப்பட வேண்டும். சிறுபான்மையினருக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று பேச்சுக்களும், அது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நீண்டகாலமாக நடைபெற்று வந்துள்ளன. இலங்கையை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்பதனை ஏற்றுக் கொண்ட போதிலும் அதனை முடிவுக்குக் கொண்டு வரக் கூடிய அரசியல் தீர்வுகளை முன்வைப்பதற்கு முன்வரவில்லை. காலத்தை வீணடிக்கும் வகையிலும், சிறுபான்மையினரை ஏமாற்றும் வகையிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றனவே அன்றி வேறு எதுவும் நடக்கவில்லை. என்ற போதிலும், ஒருசில அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அந்த மாற்றங்கள் முஸ்லிம்களை பாதிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. இந்தப் பாதிப்புப் பற்றி முஸ்லிம் அரசியல் கட்சிகளோ, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களோ அக்கறை கொள்ளவில்லை. இந்த நாட்டை யார் ஆண்டால்தான் தமக்கென்ன தங்களுக்கு அமைச்சர் பதவியும், ஏனைய சொகுசு வசதிகளும் இருந்தால் போதுமானது என்றும், அவற்றைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும்தான் முஸ்லிம் அரசியல் தரப்பினர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பொன்றைக்  கொண்டு வருவதா அல்லது தற்போதுள்ள அரசியல் யாப்பில் மேலும் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதா என்றும் சிந்திக்கப்படுகின்றன. இவ்வாறு சிந்திக்கப்பட்டாலும் அவற்றுக்குள் அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ளும் திட்டங்களையும் எல்லா அரசியல் கட்சிகளும் கொண்டுள்ளன. ஆனால், முஸ்லிம் அரசியல் கட்சிகள் தாம் சார்ந்துள்ள பேரினவாத கட்சிகளின் அரசியல் இலாபத்திற்கு ஏற்றவகையில் தலையை ஆட்டுவதற்குத் தங்களை தயார் நிலையில் வைத்திருப்பதனையும் குறிப்பிட வேண்டும்.

இனப் பிரச்சினைக்கு அரசியல் யாப்பின் மூலமாக தீர்வு காணப்பட வேண்டுமென்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதெல்லாம் தமிழர்களை மையப்படுத்தியே பேச்சுக்கள் நடைபெற்றுள்ளதுடன், தமிழர்களின் அபிலாசைகளை உள்ளடக்கியதாகவே அரசியல் நகல் திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனை தமிழரசுக் கட்சியின் முதன்மைத் தலைவர் தந்தை செல்வா காலம் முதல் நல்லாட்சி அரசாங்கத்தின் முன்வைக்கப்பட்ட அரசியல் நகல் திட்டத்தின் மூலமாகவும் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதற்கு முஸ்லிம் அரசியல் தரப்பினரிடம் காணப்பட்ட அரசியல் தீர்வு பற்றிய அக்கறையின்மையும், முஸ்லிம் அரசியல் தரப்பினரை வேறு வகைகளில் திருப்திப்படுத்திக் கொள்ளலாமென்ற மனப் போக்கும், முஸ்லிம்களிடம் காணப்படும் தூரநோக்கற்ற அரசியல் நோக்கமுமே இதற்கு காரணமாகும்.

சிறுபான்மையினர் எனும் போது அரசாங்கமும், சர்வதேசமும் தமிழர்களையே கவனத்திற்கொண்டு செயற்படுகின்றன. தமிழர் தரப்பினர் முஸ்லிம்களை தமிழ் பேசுகின்றவர்கள் என்ற மொழி அடையாளத்திற்குள் உட்படுத்தி முஸ்லிம்களுக்கெனத் தனியான அபிலாசைகளை உள்ளடக்க வேண்டியதில்லை என்றும், பேரினவாத பௌத்த மேலாதிக்கக் கட்சிகள் முஸ்லிம்களை வார்த்தைகளினால் சமாளிக்கும் நிலையையும் காணுகின்றோம்.

இத்தகையதொரு பின்னணியில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. தமிழர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையும், தனிப்பெரும் சிங்கள மக்களின் ஆதரவுடன் வெற்றியைப் பெறுவதற்கு மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான தரப்பினரும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நாட்டைப் பிரிக்க முடியாது. ஒற்றையாட்சியின் கீழ் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு  காணப்பட வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. மறு புறத்தில் அரசியல் யாப்பொன்று தேவையில்லை. ஐக்கிய தேசியக் கட்சி நாட்டைப் பிரிப்பதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்று மஹிந்த ராஜபக் ஷ ஆதரவுக் குழுவினரும், பொதுஜன முன்னணியும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. அதேவேளை, வடக்கும், கிழக்கும் இணைந்த சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வே முன் வைக்கப்படவுள்ளதென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு அரசியல் கட்சிகள் தெரிவித்துக் கொண்டாலும் இதற்காக கையாளப்படும் சொல் ஒன்றாகவே இருக்கின்றது. அதாவது ‘ஏக்கிய ராஜ்ய’ எனும் சிங்கள சொல்லை வைத்தே இத்தனை வியாக்கியானங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஏக்கிய ராஜ்ய என்பது சமஷ்டியையே குறிக்கின்றது. பெயரில் மாற்றமேயன்றி அதன் உள்ளடக்கத்தில் சமஷ்டியே உள்ளதென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலமாக அக்கட்சி தமிழர்களை திருப்திப்படுத்துவதற்கு முனைகின்றது. ஆயினும், அக்கட்சி வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமென்பதில் குறியாகவே இருக்கின்றது.

இந்நிலையில் முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் ஏக்கிய ராஜ்ய பற்றிய எந்த வியாக்கியானத்தையும், முஸ்லிம்களுக்கும் அரசியல் அதிகாரம் தரப்பட வேண்டுமென்பது பற்றியும், வடக்கும், கிழக்கும் இணைய வேண்டுமா அல்லது பிரிய வேண்டுமா என்பது பற்றியும் எக்கருத்தையும் இன்றைய அரசியல் சூழலில் முன்வைக்காதுள்ளனர்.

இதனிடையே மாநாயக்க தேரர்கள் புதிய அரசியல் யாப்பு தேவையில்லை. தேர்தல் ஒன்றுக்கு சென்று மக்களின் அபிப்பிராயத்திற்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நிபுணர்களின் அறிக்கை எனும் பெயரில் புதிய நகல் திட்டமொன்று 11.01.2019இல் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களைப் பற்றி எதுவுமில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை பாதுகாப்பு முக்கியமாகும். எந்த அரசாங்கம் வந்தாலும் பௌத்த இனவாதக் குழுக்களினால் அரசியல்வாதிகளின் பின்புலத்தில் தாக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. பௌத்த இனவாதிகளும், இந்து இனவாதிகளும் முஸ்லிம்களையே தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இதிலிருந்து பாதுகாப்பு பெறவேண்டுமாயின் முஸ்லிம் அரசியல் தரப்பினர் சமூகம் சார்ந்து செயற்பட வேண்டும். முஸ்லிம் அமைப்புக்கள் சோம்பிப் போயிருக்காது அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆயினும், முஸ்லிம் அரசியல் தரப்பினரைப் பொறுத்தவரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சட்டமூலங்கள் முஸ்லிம்களுக்கு நன்மைகளைக் கொண்டுவருமா அல்லது தீமைகளைக் கொண்டுவருமா என்று ஆராய்ந்து பார்ப்பதில்லை. அரசாங்கத்தின் பங்காளிகள் என்று பெருமை பேசிக்கொண்டு முஸ்லிம்களுக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்திய சட்டமூலங்களை ஆதரித்த வரலாறுகளே உள்ளன. அந்தவகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்கவும், ஒருவர் எத்தனை முறையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற விடயங்களையும் உள்ளடக்கிய 18ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்களை மூடிக்கொண்டு ஆதரவளித்தார்கள்.  பின்னர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 18ஆவது திருத்தத்தில் உள்ளவற்றை வரிதாக்கி, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட 19ஆவது திருத்தத்திற்கும் ஆதரவு வழங்கினார்கள். இதன் மூலமாக முஸ்லிம் அரசியல் தரப்பினர் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சட்டமூலங்கள் எதுவாக இருந்தாலும் ஆதரவு வழங்கும் நிலையிலேயே இருக்கின்றனர் என்று தெரிகின்றது.

அதுமட்டுமன்றி இஸ்லாத்திற்கு முரணான சூதாட்டம் மற்றும் களியாட்டத்துடன் தொடர்பான சட்டமூலம் கொண்டுவரப்பட்ட போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்த்து வாக்களிப்பதற்குப் பதிலாக வாக்களிப்பில் கலந்துகொள்ளாது வெளிநடப்பு செய்து அந்த சட்டமூலத்திற்கு மறைமுக ஆதரவை வழங்கினார்கள்.

மேலும், தேர்தல் திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டபோது, அரசியல் விமர்சகர்கள், முஸ்லிம் கல்வியியலாளர்கள் பலரும் குறித்த சட்டமூலம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்குமென்று சுட்டிக் காட்டியபோது அதனை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், கட்சிகளும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்கள். ஆயினும், கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே குறைவடைந்துள்ளது. அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள சபைகளின் ஆட்சியை தனியே ஒரு கட்சியினால் அமைக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இப்போது புதிய சட்டமூலத்தை மாற்றி பழைய விகிதாசார தேர்தல் முறைக்குச் செல்ல வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதேபோலவே, மாகாண சபைத் தேர்தலுக்குரிய தேர்தல் தொகுதிய நிர்ணயத்தில்கூட முஸ்லிம்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படும் வகையில் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆயினும், அதுபற்றி அதிகம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு முஸ்லிம்களை அழிவினை நோக்கி அழைத்துச் செல்லும் முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்பட்டாலோ அல்லது தற்போதையே அரசியல் யாப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலோ முஸ்லிம்களின் அபிலாசைகளை உள்ளடக்க வேண்டுமென்று கவனம் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் தற்போது வரைக்கும் உள்ள பதிவாக இருக்கின்றது.

மேலும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டபோது ஜனநாயகத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்று மேடைகளில் முழக்கமிட்டது மட்டுமன்றி, கோர்ட்டை தூக்கிக்கொண்டு உயர்நீதிமன்றம் வரை சென்றார்கள். ஆனால், முஸ்லிம்களை பௌத்த இனவாதிகள் நாட்டின் பல பாகங்களிலும் மிகவும் மோசமாகத் தாக்கியபோது முஸ்லிம் அரசியல் தலைமைகள் நீதிமன்றங்களை நாடவில்லை. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய  நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டுமென்பது தமிழர்களின் அபிலாசையாகும். இதற்கு குறுக்காக முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் நிற்காதென்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். அதேவேளை, கிழக்கு முஸ்லிம்கள் மட்டுமன்றி நாட்டிலுள்ள முஸ்லிம்களின் அபிலாசையாக கிழக்கு மாகாணம் வடக்குடன் இணையக் கூடாதென்பதாக இருக்கின்றது. தாம் முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக பேசுகின்றோம் என்று ரவூப் ஹக்கீம் உணரவில்லை. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமிழர்களையும், சிங்களவர்களையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்துவதற்கு முனைகின்றார்கள். இந்த இரு நிலைப் போக்கு காரணமாக முஸ்லிம்களின் அபிலாசைகள் புதைக்கப்படுகின்றன.

மாற்று சமூகத்தின் அபிலாசைகளை பாதிக்கச் செய்யும் வகையில் நடந்துகொள்ளக் கூடாதென்று  சொல்வதற்கு நன்றாகவே இருக்கும். ஆனால், அதற்காக முஸ்லிம் சமூகத்தின் கழுத்திற்கு கத்தியை வைக்கும் நிலையை உருவாக்க முடியாது. முஸ்லிம்களின் எதிர்காலத்தை சிதைக்கக் கூடியவற்றிக்கு முஸ்லிம்களின் தலைகளில் மிளகாய் அரைக்கும் நிலைக்கு சமூகத்தை கொண்டு போக முடியாது.

இதேவேளை, ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்ய வேண்டுமென்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. அதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஜனாதிபதி முறை இருக்க வேண்டும். அதுவே முஸ்லிம்களுக்கு நன்மைகளைக் கொண்டுவரும் என்று பரவலாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமாயின் முஸ்லிம்களின் ஆதரவு அவசியமாகும். முஸ்லிம்களின் வாக்குகளினால்தான் வெற்றி தீர்மானிக்கப்படுமென்று தெரிவிக்கப்படுகின்றது. இதில் உண்மையுமுள்ளது. ஆனால், ஜனாதிபதி முறையில் மர்ஹும் அஷ்ரப் மாத்திரமே முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமின்றி சிறுபான்மையினருக்கும், சிறு கட்சிகளுக்கும் நன்மைதரும் வகையில் 12 வீத வெட்டுப் புள்ளியை 05 வீதமாக மாற்றியமைத்தார். இதற்குப் பின்னர் எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும் முஸ்லிம்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்று கோரிக்கைகள் முன்வைக்கவில்லை. தேர்தல்களின் மூலமாக பல கோடிகளை சம்பாதித்துக் கொள்ளும் போக்கையே முஸ்லிம் அரசியல் தலைமைகள் மேற்கொண்டு வருகின்றன.  ஆனால், ஜனாதிபதி தேர்தல்களின்போது முஸ்லிம்களின் அபிலாசைகளை வென்றெடுக்க கோரிக்கைகளை முன்வைக்க முடியும். கேட்டால்தான் கிடைக்கும். கேட்காத நிலையில் எதனையும் அரசியலில் பெற்றுக்கொள்ள முடியாது. கேட்காத உரிமை வேண்டாமென்று சொன்ன உரிமையாகிவிடும்.

ஆதலால், முஸ்லிம் கட்சிகளும், அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினாகளும் தாங்கள் கொண்டுள்ள அரசியல் நிறங்களை மறந்து சமூகம் என்ற சாயத்தை பூசிக்கொள்ள வேண்டும். சமூகம் வாழ வேண்டுமென்ற நல்லெண்ணம் வரவேண்டும். இதற்குப் பின்தான் அமைச்சர் பதவிகளும், கட்சி நிறங்களும் இருக்க வேண்டும். சிங்களப் பேரினவாதம் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை தலைவர் பதவி மோகம், அமைச்சர் பதவிகள், ஊழல் போன்றவைகளின் ஊடாக உடைத்து சுக்குநூறாக்கியது. இதனால்தான் முஸ்லிம்களின் அரசியல் பலம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது தமிழர்களின் அரசியல் பலத்தையும் சிதைத்துள்ளது.

பேரினவாதக் கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கையாக முஸ்லிம் கட்சிகளை பேரினவாத கட்சிகளுடன் முழுமையாக சங்கமிக்க வைப்பதாகவே இருக்கின்றது. தற்போதுகூட முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எல்லா முஸ்லிம் கட்சிகளும் பேரினவாதக் கட்சிகளின் முகவர்களாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. முகவர் என்ற நிலை மாறும்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் பேரினவாதக் கட்சிகளின் அடிமைகள் போன்று இன்றுள்ள நிலையை விடவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதனை முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் சிந்திப்பதில்லை. பொதுத்தேர்தலில் தாங்கள் இலகுவாக வெற்றிகொள்ள வேண்டுமென்பதற்காக தேர்தல் தொகுதிகளை அமைத்துக் கொள்ளும் சுயநலத்தில்தான் தலைவர்களும், ஏனைய அரசியல்வாதிகளும் உள்ளார்கள்.

ஆதலால், தம்மை பற்றி மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் தங்களுக்கு எத்தனை ஆயிரம் சிங்கள வாக்குகள் கிடைக்குமென்று கணித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்காக அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் எந்த உரிமையையும் விட்டுக் கொடுப்பார்கள். தமது கட்சியின் சின்னத்தை யானைக்கும், கைக்கும் விலைபேசி விற்றவர்கள் என்ற நிலையில்தான் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் உள்ளன. தலைவர்கள் தலைகுனிந்து பட்டம், பதவிகளுக்காக கைகளை கட்டிக் கொண்டிருக்கும் வரை முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழமுடியாது. ஆதலால், முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வகையில் செயற்படும் அரசியல் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். தங்களின் அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம் சமூகத்தை வட்டிக்கும், ஏனைய பாவத்திற்கும் தூண்டும் அரசியல்வாதிகளே முஸ்லிம் சுமூகத்தின் அரசியல் தலைவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, முஸ்லிம்களின் அரசியல் தரப்பினர்கள் அரசியலமைப்பு ரீதியாகவும், ஏனைய துறைகள் ரீதியாகவும் சமூகத்தை பாதுகாத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு சமூகத்தின் நிலைபேறு என்பது அச்சமூகத்திலுள்ள தலைவர்களின் உறுதியான நடவடிக்கைகளிலேயே இருக்கின்றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.