அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் மிகப்பெரும் கூட்டமைப்பான ஜி 77 மற்றும் சீனாவின் தலைமைப் பதவி பலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டமையைக் குறிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையில் நிகழ்வொன்று இடம்பெற்றது
அந்நிகழ்வில் உரையாற்றிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் ஆக்கிரமிக்கப்பட்ட ஆள்புலப் பிரதேசங்களின் அபிவிருத்தியை இஸ்ரேல் தடை செய்வதாகத் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், இஸ்ரேல் எமது அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் இணைப்புக்கான ஆற்றல்களைப் புறந்தள்ளி பலஸ்தீன தேசத்தில் காலனித்துவ செயற்பாடுகளையும் ஆக்கிரமிப்பையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதோடு அந்தப் பிராந்தியத்திலுள்ள அனைத்து மக்களினதும் ஒட்டுமொத்த எதிர்கால அபிவிருத்திற்கும் தடைகளை ஏற்படுத்துகின்றது எனவும் அவையில் தெரிவித்தார்.
ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்து அருகருகே அமைதியாகவும் பாதுகாப்புடனும் இஸ்ரேல் தேசத்துடன் வாழும் விதமாக கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்ட பலஸ்தீன தேசத்தின் சுதந்திரத்தை உணர்த்தும் வகையிலான அமைதித் தீர்வுக்கு தான் இதுவரை அர்ப்பணிப்புடன் உழைத்து வருவதாகவும் பலஸ்தீனத் தலைவர் தெரிவித்தார்.
இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக்கு பலஸ்தீன் மீது அமெரிக்கா கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையில் ஜி 77 நாடுகளின் தலைமைப் பதவியில் பலஸ்தீன் அமர்த்தப்பட்டுள்ளது.
ஜெரூசலத்தின் அந்தஸ்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச கருத்தினை மீறி கடந்த டிசம்பர் 2017 இல் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.
இந்தத் தீர்மானம் பலஸ்தீனர்கள் மற்றும் அரபுக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியதோடு சர்வதேச அரங்கில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன இராச்சியம் தொடர்பான அழுத்தங்கள் மேலும் அதிகரித்தன.
பலஸ்தீனத்திற்கான வரலாற்று முக்கியத்துவமிக்க செயற்பாடாக 2017 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பலஸ்தீனத்திற்கு பார்வையாளர் நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது. அதற்கு மேலதிகமாக ஜி 77 இற்கு தலைமைத்துவம் வகிக்கும் உரிமையினையும் அங்கீகரித்தது.
வருடாந்தம் சுழற்சி முறையில் தலைமைத்துவப் பதவி வழங்கப்படும் 134 நாடுகளைக் கொண்டதே இவ்வமைப்பாகும்.
இந்தத் தீர்மானத்திற்கு எதிர்த்து வாக்களித்த அமெரிக்கா, பலஸ்தீனத்திற்கு தலைமைப்பதவி வழங்கப்படக் கூடாது. ஏனெனில் பலஸ்தீன் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான அங்கத்துவ நாடல்ல எனத் தெரிவித்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்ட பலஸ்தீன இராஜதந்திரியான சாயெப் எரெக்காத் இந்த நியமனம் பலஸ்தீனர்களின் குறிப்பிடத்தக்க அடைவெனத் தெரிவித்திருந்தார்.
இன்று ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸுக்கு ஜி 77 இன் வருடாந்த தலைமைத்துவப் பதவி வழங்கப்பட்டது. எமது மக்களின் தியாகம் மற்றும் சுதந்திரத்திற்கான நீண்டகாலப் போராட்டத்தின் விளைவாகக் கிடைத்த பலஸ்தீனத்திற்கான வரலாற்று முக்கியத்துவமிக்க அடைவாகும். நாம் மிகுந்த பொறுப்புணர்வுடனும், கௌரவத்துடனும், பெருமையுடனும் பாரிய சவால்மிக்கதும் தனித்துவமானதுமான அந்தஸ்தினை ஏற்றுக்கொள்கின்றோம் என ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நிருவாகத்துடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்ட மஹ்மூட் அப்பாஸ், அமெரிக்காவினால் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் பக்கச் சார்பானதாகவும் இஸ்ரேலுக்கு சார்பானதாகவும் அமைந்து காணப்படும் எனபதால் அவற்றை எதிர்ப்பதாகவும் அறிவித்தார்.
இதனையடுத்து அமெரிக்கா, பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் முகவரகத்திற்கான நிதியளிப்பு உள்ளிட்ட பலஸ்தீனத்திற்கான மில்லியன் கணக்கான டொலர் நிதியுதவிகளை இடைநிறுத்தியது. இதன் காரணமாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் முகவரகம் அதன் கல்வி மற்றும் சுகாதார நிகழ்ச்சித்திட்டங்களை மீளாய்வு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான அங்கத்துவத்தைப் பெற பலஸ்தீன் முயற்சித்து வருவதாக பலஸ்தீன வெளிநாட்டமைச்சர் றியாத் அல்-மலிக்கி கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பலஸ்தீன அங்கத்துவத் திட்டத்தினை தனது வீட்டோ வெட்டதிகாரத்தின் மூலம் தடுக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள போதிலும் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவின் வீட்டோ வெட்டதிகாரத்தினை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது எமக்குத் தெரியும் ஆனாலும் எமது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் பணியிலிருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை என அல்-மலிக்கி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
-Vidvelli