சுதந்திர தினத்திற்கு முன்னர் ஞானசாரருக்கு மன்னிப்பு

இந்து சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை

0 721

ஞானசார தேரரின் எழுச்சிமிக்க உரைகள் இலங்கை பௌத்தர்களை மாத்திரமன்றி, இலங்கை இந்துக்களையும் மதமாற்றத்தில் இருந்து பாதுகாத்துள்ளது. அவரால் கட்சி அரசியலுக்கு அப்பால் தேசத்திற்காக பல உயரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனவே சுதந்திர தினத்திற்கு முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளது.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் கலாசார அடையாளமாக பௌத்தம் திகழ்கின்றது. அதேபோன்று எமது நாட்டில் இந்து, முஸ்லிம், கத்தோலிக்கம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள் தமது மத அனுஷ்டானங்களை, மத சடங்குகளை மேற்கொள்ளவும், தங்களது பண்பாட்டு விடயங்களை சுய அடையாளத்துடன் பேணவும் முழுமையான உரிமை உடையவர்களாக உள்ளனர்.

பௌத்தர்களின் அடிப்படை அம்சங்களையும், கோட்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள திரிபீடகத்தை அரச மரபுரிமையாக்கியதன் மூலம் இலங்கை பௌத்தர்கள் மத்தியில் மாத்திரமன்றி உலக பௌத்தர்கள் மத்தியிலும் அழிக்க முடியாத வரலாற்றுச் சிறப்பினை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதையிட்டு இலங்கை குடிமகன் என்ற ரீதியில் நாங்கள் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றோம்.

இந்த நாட்டில் தமது சமயப் பெருமைகளையும், பாரம்பரியங்களையும் கண்டுகொள்ளாமல் எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் அக்கறையின்றி வாழ்ந்து வந்த பௌத்தர்களை தனது எழுச்சிமிக்க சொற்பொழிவுகள் மற்றும் ஊடக மாநாடுகள் ஊடாக தட்டியெழுப்பிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்திற்கு முன்னர் பொதுமன்னிப்பு அளிப்பதன் மூலம் வரலாற்றில் அழிக்க முடியாத புகழைப் பெற்றுக்கொள்வீர்கள்.

எமது இக்கோரிக்கை உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கும். எனினும் ஞானசார தேரரின் மதமாற்றத்திற்கு எதிரான எழுச்சிமிக்க உரைகள் இலங்கை பௌத்தர்களை மாத்திரமன்றி, இலங்கை இந்துக்களையும் மதமாற்றத்தில் இருந்து பாதுகாத்துள்ளது. விடுதலை செய்யப்படுகின்ற தேரர் கட்சி அரசியலுக்கு அப்பால் தேசத்திற்காக பல உயரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனவே சுதந்திர தினத்திற்கு முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோருகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.