நல்லாட்சி அரசாங்கத்தில் நடந்த ஊழல்களை ஆராய ஆணைக்குழு  

மூன்று மாதங்களில்  இடைக்கால அறிக்கையும் ஆறு மாதங்களில் முழுமையான அறிக்கையும் வேண்டுமென ஜனாதிபதி பணிப்பு

0 702

கடந்த 2015 ஜனவரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில்  அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் மோசடிக் குற்றங்கள் குறித்து ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையில் மேலும் நான்கு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பாரிய நிதி மோசடிகள் மற்றும் பாரிய குற்றங்கள் இடம்பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலமாக விமர்சனங்களை முன்வைத்து வருவதுடன் ஐக்கிய தேசிய கட்சி மீதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதும் அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தும் வருகின்றார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதியில் இருந்து 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் குற்றங்கள் குறித்து ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையில் மேலும் நால்வர் உள்ளடக்கிய வகையில் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன் உறுப்பினர்களாக  உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபயரத்ன (தலைவர் ) , முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன,  ஓய்வு பெற்ற கணக்காய்வாளர் நாயகம் பீ.ஏ. பிரேம திலக்க,  ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் லலித் ஆர் டீ சில்வா மற்றும்   ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் விஜய அமரசிங்க ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

நிதி மோசடிகள் மற்றும் பாரிய ஊழல் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கையை மூன்று மாதங்களுக்குள்ளும் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய  முழுமையான இறுதி அறிக்கை ஆறு மாதங்களுக்குள்ளும் ஜனாதிபதிக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இந்த ஆணைக்குழு கடந்த   2015 ஜனவரி மாதம் 15ஆம் திகதி தொடக்கம்  2018 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாக கருதப்படம் ஊழல் மோசடிகள், நம்பிக்கை மோசடி, அரச உடைமைகளை தவறாக கையாளுதல், மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரச வளங்கள் மற்றும் வரப்பிரசாதங்களை தவறான முறையில் பயன்படுத்துதல் போன்ற  நடவடிக்கைகளின் விளைவாக அரசாங்க சொத்துக்களுக்கும், வருமானத்திற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தியமை தொடர்பாக அரசியல் பதவிகளை வகித்தவர்கள், இதுவரை பதவி வகித்து வருபவர்கள், அரசாங்க ஊழியர்கள் மற்றும் நியாயாதிக்க சபைகளின் அதிகாரிகளாக கடமையாற்றிய மற்றும் சேவையில் இருக்கும் நபர்களுக்கு எதிரான பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மக்களினால் அளிக்கப்பட்ட புகார்கள், தகவல்கள் மற்றும் ஏனைய விடயங்களை கருத்திற்கொண்டு பக்கச்சார்பற்ற விரிவான விசாரணை ஒன்றை மேற்கொள்வது இந்த ஆணைக்குழுவின் பொறுப்பாகும். அத்துடன் குறித்த  குற்றங்கள் தொடர்பில் சட்ட ரீதியாக பொறுப்புக்கூற வேண்டியுள்ளவர்களை கண்டறிதல், சாட்சிகளை திரட்டுதல் ஆகியன இந்த ஆணைக்குழுவின் மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

 

 

 

Leave A Reply

Your email address will not be published.