எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டிலுள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் நடத்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்கள் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அமையவேண்டுமென அஞ்சல் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார் . இதேவேளை எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டிலுள்ள அனைத்து அஹதிய்யா பாடசாலைகள், அரபுக் கல்லூரிகள், குர்ஆன் மத்ரஸாக்களில் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருள் விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளதையடுத்தே அமைச்சர் மேற்குறிப்பிட்ட கோரிக்கையினை விடுத்துள்ளார்.
அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்றும்படி அனைத்து ஜும்ஆபள்ளிவாசல் நிர்வாகங்களையும் அரபுக் கல்லூரிகள், குர் ஆன் மத்ரஸாக்கள் மற்றும் அஹதிய்யா பாடசாலைகள் என்பவற்றையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டியுள்ளது.
இதேவேளை, அக்குறணை பெரிய பள்ளிவாசலில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய நிகழ்ச்சியொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் கலந்துகொள்ளவுள்ளார்.
-VIdivelli