மலேசியாவில் இஸ்ரேல் தொடர்பான எந்த நிகழ்வுக்கும் இனிமேல் இடமளிக்கப்படமாட்டாதென மலேசிய வெளிநாட்டமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை கருத்து வெளியிட்ட மலேசிய வெளிநாட்டமைச்சர் சைபுத்தீன் அப்துல்லாஹ், நடைபெறவுள்ள பரா நீச்சல் போட்டியில் கலந்துகொள்வதற்கு இஸ்ரேல் வீரருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.
ஜுலை மாதம் இடம்பெறவுள்ள இப்போட்டி 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள டோக்கியோ பரா ஒலிப்பிக் போட்டிக்கான தகுதிகாண் போட்டியாகும். விளையாட்டு நிகழ்வுகளுக்காகவோ அல்லது வேறு எந்தவொரு நிகழ்வுக்காகவும் இஸ்ரேல் தூதுக்குழு மலேசியாவினுள் நுழைய முடியாது என கடந்த வாரம் அமைச்சரவை உறுதிப்படுத்தியதாக வெளிநாட்டமைச்சர் தெரிவித்தார்
இஸ்ரேலிய பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் மலேசியாவில் இஸ்ரேல் தொடர்பான எந்த நிகழ்வுக்கும் இனிமேல் இடமளிக்கப்படமாட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம்களைப் பெரும்பன்மையாகக் கொண்ட, பலஸ்தீனத்திற்கு பலமான ஆதரவை வழங்கிவரும் மலேசியா இஸ்ரேலுடன் எந்தவித இராஜதந்திர தொடர்புகளையும் பேணாத நாடாகும்.
இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெரூசலத்தை அங்கீகரிக்கும் அவுஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய தீர்மானத்தை வன்மையாக எதிர்ப்பதாக கடந்த மாதம் மலேசியா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli