சுமார் 670,000 அரச பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான துனிசிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டின் பலமிக்க தொழிற்சங்கத்திற்கும் இடையேயான பேச்சுவார்ததையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் இவ்வாரம் நாடு தழுவியரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
துனிசிய பொதுத் தொழிற்சங்கம் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்களை உள்ளடக்கியுள்ளது.
நாட்டின் வரவு௸ செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையினைக் குறைப்பதற்கு உதவும் வகையில் அரச பணியாளர்களின் சம்பளத்தினை உயர்த்த வேண்டாமென துனிசியாவுக்கு சர்வதேச நாணய நிதியம் அழுத்தம் கொடுத்து வருகின்றது.
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை எவ்வித பலனையும் அளிக்கவில்லை, வியாழக்கிழமையன்று நாம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என துனிசிய பொதுத் தொழிற்சங்கத்தின் அதிகாரி ஹாபெத் பெய்த் தெரிவித்தார்.
எந்த விபரங்களையும் தெரிவிக்காது அரசாங்கத்தினால் புதிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டபோதிலும் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துவிட்டதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
வேலையின்மையும் பணவீக்கமும் உச்ச நிலையில் காணப்பட்ட நிலையில் 2011 ஆம் ஆண்டு சர்வாதிகாரி ஸைன் அல்-ஆப்தீன் பென் அலி பதவி கவிழ்க்கப்பட்டதிலிருந்து துனிசியாவின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் சுமார் 670,000 அரச பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு கோரி பணிப்கிஷ்கரிப்பில் ஈடுபட்டதோடு ஆயிரக் காணக்கானோர் நாடுமுழுவதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-VIdivelli