ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான அங்கத்துவத்தைப்பெற பலஸ்தீன் முயற்சித்து வருவதாக பலஸ்தீன வெளிநாட்டமைச்சர் றியாத் அல்-மலிக்கி கடந்த செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
பலஸ்தீன அங்கத்துவத் திட்டத்தினை தனது வீட்டோ வெட்டதிகாரத்தின் மூலம் தடுக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளபோதிலும்,
இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவின் வீட்டோ வெட்டதிகாரத்தினை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனாலும் எமது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் பணியிலிருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை என அல்-மலிக்கி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
எதிர்வரும் வாரங்களில் பாதுகாப்பு சபையிலுள்ள அங்கத்தவர்களிடம் சென்று இது தொடர்பில் விளக்கும் செயற்பாட்டில் பலஸ்தீனர்கள் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவத்திற்காக பலஸ்தீனர்கள் 2011 ஆம் ஆண்டு விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர். எனினும் குறித்த விண்ணப்பம் வாக்களிப்புக்காக பாதுகாப்புச் சபையில் இதுவரை எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்த முயற்சியினைத் தொடர்ந்து பலஸ்தீனம், உறுப்பினரல்லாத பார்வையாளர் குழு என்ற அந்தஸ்திலிருந்து உறுப்பினரல்லாத பார்வையாளர் தேசம் என்ற அந்தஸ்திற்கு தரமுயர்த்தப்பட்டது. இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரினால் சமர்ப்பிக்கப்படும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட முடியும்.
அதனைத் தொடர்ந்து பலஸ்தீன் 50 இற்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புக்களிலும் உடன்படிக்கைகளிலும் இணைந்துகொண்டது என பலஸ்தீன வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.
இவற்றுள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஐக்கிய நாடுகள் சபையின் மரபுரிமைக்கான அமைப்பான யுனெஸ்கோ ஆகியன அடங்கும்.
2017 ஆம் ஆண்டு பலஸ்தீன அங்கத்துவக் கோரிக்கையினை சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் அமைப்பு ஏற்றுக்கொண்டமை பலமான இஸ்ரேலிய எதிர்ப்புக்கு மத்தியிலும் சர்வதேச பிரதிநிதித்துவத்திற்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும்.
-Vidivelli