சவூதி நாட்டவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு

0 684

சவூதி நாட்டவர்களை தனியார் நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு செய்வதை ஊக்குவிப்பதற்காகவும், தொழிற்சந்தையில் அவர்களது பங்குபற்றுதலினை அதிகரிப்பதற்காகவும் தனியார் நிறுவனங்களால் பணிக்கமர்த்தப்படும் சவூதி நாட்டவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் ஒரு பகுதிக்கு அரசாங்கம் பங்களிப்பு செய்யவுள்ளது.

இந்த முன்னெடுப்பு தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை சவூதி அரேபிய தொழில் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் அஹ்மட் அல்-ராஜ்ஹி அறிவித்தார்.

மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் முதன்மைச் சபையின் தலைவராகவும் பதவி வகிக்கும் அல்-ராஜ்ஹி ‘திறன்களை மேம்படுத்துவதும், சவூதி அரேபிய சனத்தொகையினை எதிர்காலத்திற்காக தயார்படுத்ததலும் இதன் இலக்காகும்’ எனவும் தெரிவித்தார்.

சவூதி அரேபியா சில பதவிகள் சவூதி நாட்டவர்களுக்கே வழங்கப்பட வேண்டுமென சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு, வெளிநாட்டு பணியாளர்களைவிட அதிக விகிதாசாரத்தில் சவூதி நாட்டவர்கள் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

11.6 வீதமாகக் காணப்படும் தொழிலின்மையை 7 வீதமாகக் குறைப்பதும், தொழிலாளர் படையில் பெண்களின் பங்கினை 22 வீதத்திலிருந்து 30 வீதமாக அதிகரிப்பதும் 2030 தூரநோக்கு மறுசீரமைப்பு நோக்காகக் கொண்டுள்ளது.

அமைச்சின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமைவாக குறைந்த மாதாந்த சம்பளத்திற்கான கொடுப்பனவாக நான்காயிரம் சவூதி றியால்களும் (1,066 அமெரிக்க டொலர்) ஆகக்கூடிய மாதாந்த சம்பளத்திற்கான கொடுப்பனவாக பத்தாயிரம் சவூதி றியால்களும் வழங்கப்படவுள்ளன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.