அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தால் நாங்கள் எமது வேட்பாளரை அறிவிப்போம். வேட்பாளரை தெரிவுசெய்வது எமக்குப் பெரிய விடயமல்லவென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் வேட்பாளர் தொடர்பாகவுமே பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விடயத்தில் நாங்கள் அலட்டிக்கொள்ளமாட்டோம். ஏனெனில் எமது எதிர்பார்ப்பாக இருப்பது மாகாணசபை தேர்தலாகும். அதற்கான முயற்சியிலே நாங்கள் இருக்கின்றோம்.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வது எமக்குப் பெரிய விடயமல்ல. அதனை வெளிப்படுத்தவும் நாங்கள் அஞ்சமாட்டோம். ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று நாட்டுக்கு தெரிவிப்பதற்கு முன்னர் அரசாங்கம் முதலாவதாக
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கவேண்டும். அதன் பின்னர் எமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாங்கள் அறிவிப்போம். அதுவரைக்கும் நாங்கள் அவசரப்படமாட்டோம்.
மேலும், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா அல்லது புதிய அரசியலமைப்பை கொண்டுவருகின்றதா என்பதை அரசாங்கம் தெரிவிக்கவேண்டும். ஏனெனில் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவந்து ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக இருந்தால் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வதில் பயனில்லாமல்போகும்.
அதனால் அரசாங்கம் ஆரம்பமாக ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தால், நாங்கள் சரியான நேரத்தில் பொருத்தமான வேட்பாளர் யார் என்பதை நாட்டுக்கு அறிவிப்போம்.அதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.
-Vidivelli