திட்டமிடப்பட்ட சீன கம்யூனிஸ அரச அடக்குமுறையை எதிர்கொள்ளும் முஸ்லிம்கள்
சீனாவில் முஸ்லிம்கள் மூர்க்கமான அரச அடக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றார்கள் என்ற செய்தி அவ்வப்போது வந்து போனாலும்,
- எஸ். எம். மஸாஹிம் (இஸ்லாஹி)
சீனாவில் முஸ்லிம்கள் மூர்க்கமான அரச அடக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றார்கள் என்ற செய்தி அவ்வப்போது வந்து போனாலும், தற்போது, சீனாவில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஷின்ஜியாங் மாகாணத்தில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் சீன கம்யூனிஸ தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் “re-education” என்ற ”மீள் கல்வியூட்டல்” என்ற நிகழ்ச்சித் திட்டத்துக்கு பலவந்தமாக உட்படுத்தப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் Human Rights Watch குற்றம்சாட்டுகின்றது.
தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒரு மில்லியன் வரையான முஸ்லிம்கள் இஸ்லாத்தை கைவிடுமாறு நிர்பந்திக்கப்படுவதாகவும், பன்றி இறைச்சி உண்ணவும் , கம்யூனிஸ சித்தாந்தகோட்பாடுகளை மனனமிடவும் சீனாவில் பெரும்பான்மையினர் பேசும் மொழியான Mandarin மொழியை கற்றுக்கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவற்றை செய்ய மறுப்பவர்கள் கடுமையான சித்திரவதைகளை எதிர்கொள்வதாகவும் மேலும் சில மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டிவருகின்றன .
மேற்கு சீனாவில் சுமார் 11 மில்லியன் உய்குர் முஸ்லிம்கள் பல்வேறு பாதுகாப்பு நெருக்கடிகளை எதிர்கொள்வதாக அந்த மனித உரிமை அமைப்புகள் மேலும் குற்றம்சாட்டுகின்றன. ஆனால் இந்தக் குற்றசாட்டுகள் அனைத்தையும் வழமைபோன்று சீனா மறுத்துவருவதுடன், ஷின்ஜியாங் மாகாணத்தி தாம் “vocational training” திட்டத்தைத்தான் நடைமுறைப்படுத்துவதாகவும் இதேவேளை பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகிய மூன்று தீயசக்திகளை தாம் எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது .
ஆனால், கடந்த நான்காண்டுகளில் சீனாவில் இஸ்லாமிய அடையாளங்களை குறிவைத்து தாக்குதல் நடாத்தும் சம்பவங்கள் ஷின்ஜியாங் மாகாணத்தில் மட்டுமின்றி சீனா முழுவதும் பரவிவருவதாகவும் , ஹலால் இலச்சினை மற்றும் அறபு எழுத்துக்கள், இஸ்லாமிய அடையாளங்களை வெளிப்படுத்தும் படங்களை கொண்ட உணவகங்களில், வியாபார நிலையங்கள் பரவலாக தாக்குதல்களுக்கு உள்ளாகிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சீனாவின் அரச துறைகளில் கடமையாற்றும் முஸ்லிம் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இரட்டை முகம் காட்டுவதாகவும் இஸ்லாத்துக்கு சார்பாக செயற்படுவதாகவும் குற்றம்சாட்டி கைதுசெய்யப்பட்டுள்ளனர். சீனாவில் எல்லா மதங்களும் நெருக்கடியை தற்போது எதிர்கொண்டாலும் இஸ்லாமும் முஸ்லிம்களும் அதிகூடிய மூர்க்கமான அடக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளனர் என்பதை பல்வேறு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன .
சீன முஸ்லிம்கள் அடக்கு முறைகளை எதிர்கொள்வது புதிய ஒன்றல்ல. மாவோ தலைமையில் நடந்த கம்யூனிஸ புரட்சியின்போது (1966-1976) முஸ்லிம்கள் மிகக் கடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். மஸ்ஜித்கள், மத்ரஸாக்கள் உடைக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டன, பல இமாம்கள் கொல்லப்பட்டனர், பலர் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட்டனர், பலர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். மாவோவின் மரணத்திற்கு பிறகு முஸ்லிம்கள் மற்றும் கிஸ்தவர்களின் தொடரான கோரிக்கைகளுக்குப் பின்னர் மஸ்ஜித்கள், தேவலையங்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டாலும் பல கட்டுப்பாடுகளுடன் கூடிய இறுக்கமான வாழ்வைத்தான் முஸ்லிம்கள் அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். தற்போது மீண்டும் இஸ்லாத்தின் மீதும் , முஸ்லிம்கள் மீதும் கம்யூனிஸ சீனா மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றது. இஸ்லாத்தை பின்பற்ற முயற்சிப்பதை ஒரு மனநோயாக கம்யூனிஸ அதிகாரிகள் குறிப்பிடுவதாக முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுமார் ஒரு மில்லியன் உய்குர் முஸ்லிம்கள் வதை முகாம்களிலும் சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அதன் கொடூரத்தை காட்டப் போதுமானதாக உள்ளது .
சீனாவில் வாழும் இரு இன முஸ்லிம் குழுக்களாக ஷின்ஜியாங் பிரதேச உய்குர் முஸ்லிம்கள், ஹுய் முஸ்லிம்கள் என்ற பாகுபாடின்றி பொதுவாக சீனாவில் முஸ்லிம்கள் மீது இஸ்லாத்தை பின்பற்றுவதத்திற்கு எதிராக கடுமையான , இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது அதிகரித்து வருகின்றது. பொது வாழ்வில் இஸ்லாத்தை பின்பற்றமுடியாதவாறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் ”அதான்” தடை செய்யப்பட்டு அதற்குப் பதிலாக மணியோசை எழுப்பும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதன. முஸ்லிம் அரச ஊழியர்கள் ரமழான் மாதத்தில் நோன்பு பிடிக்கவும், பொதுவாக இஸ்லாமிய உடைகளை அணியவும் தடை தொடர்கின்றது. மற்றும் கம்யூனிஸ கட்சிசார் செயலணி உறுப்பினர்களாக இருப்பவர்கள் மஸ்ஜித்களுக்கு செல்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஹஜ் கடமையை நிறைவேற்றுவது என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன. பல அறபு மொழி மத்ரஸாக்கள், மஸ்ஜித்கள் என்பன மூடப்பட்டுள்ளதுடன் இஸ்லாமிய புத்தக நிலையங்களின் புத்தகங்கள் அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுவருகின்றன. இது தவிர மஸ்ஜித்களில் கட்டிட மாதிரிகளில் சீனாவின் கலாசாரம் பிரதிபலிக்கவேண்டும் என்பதுடன், அரபு எழுத்துக்களுக்கு பதிலாக சீன எழுத்துக்களை பயன்படுத்துமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்கள் மஸ்ஜித்களில் நுழையும்போது கடுமையாக சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதுடன், தொழுபவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றார்கள். தாடி வைப்பவர்கள், ஹிஜாப் அணிபவர்கள் பயங்ரகரவாத சந்தேகநபர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றார்கள், சீன கம்யூனிஸ அதிகாரிகளினால் முஸ்லிம்களின் DNA மாதிரிகள், குரல் மாதிரிகள், கருவிழித்திரை மாதிரிகள், கைரேகைகள், இரத்த வகை என்பன சேகரிக்கப்படுகின்றன. இதுதவிர, முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் அதீநவீன தொழில்நுட்ப சாதனங்களால் கண்காணிக்கப்படுகின்றன. இதுபற்றி கருத்துரைத்துள்ள அமெரிக்காவில் வாழும் உய்குர் மனித உரிமை செயல்பாட்டாளர் ஒருவர், முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் குறிப்பாக ஷின்ஜியாங் மாகாணம் பறவைகளை போன்று காட்சி தரும் அதிநவீன ட்ரொன்ஸ் இயந்திரங்களால் கண்காணிக்கப்படுவதாகவும் இந்த முறை ஹஜ்ஜுக்கு சென்ற பலர் GPS கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றார்.
சீனாவில் 56 இனங்கள், நாட்டின் இன குழுக்களாக சீன கம்யூனிஸ அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஹன் இன சீனர்கள் 91.6 வீதம் உள்ளனர் என அரச தகவல் குறிப்பிடுகின்றது. மீதமுள்ள 9 வீத மக்களில் 55 சிறுபான்மை இனத்தவர்களில் 10 இனக் குழுக்கள் ஸுன்னி முஸ்லிம்களாக உள்ளனர் . இவர்களில் பெரும்பான்மையாக இருக்கக் கூடியவர்கள் உய்குர் மற்றும் ஹுய் இன முஸ்லிம்கள் என சீன அரசாங்கத்தின் உத்தியோபூர்வ தகவல்கள் மூலம் அறிய முடியுமாக உள்ளது ,
உய்குர் இனத்தவர்கள் உய்குர் மொழி பேசுபவர்கள். உய்குர் மொழி துருக்கிய மொழிகளில் ஒன்றாகும். அரபி எழுத்துக்களை எழுத்து வடிவமாக கொண்ட மொழியாக இவர்களின் மொழி உள்ளது .
இன்றைய சீனாவின் முஸ்லிம்களின் தொகை சுமார் இரண்டு கோடி தொடக்கம் பத்து கோடி வரை இருக்கலாமென்று தகவல்கள் கூறுகின்றன. இது சீன மக்கள் தொகையில் 2% – 7.5%-மாக இருக்கின்றது. இதேவேளை, சீன மக்கள் தொகையில் இருபதில் ஒரு பங்கு முஸ்லிம்கள் என்றாலும், சீனாவின் நிலப்பரப்பில், முஸ்லிமகளை பெரும்பான்மையாகக் கொண்ட ஷின்ஜியாங் ஆறில் ஒரு பங்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர் என்பதுடன் ஷின்ஜியாங் இலங்கையை போன்று பல மடங்கு பெரியது என தகவல்கள் குறிப்பிடுகின்றன .
சீன முஸ்லிம்கள் என்று கூறும்போது ஷின்ஜியாங் என்ற பரந்த நிர்வாகப் பிரிவில் வாழும் அதன் பூர்வீக குடிகளான உய்குர் முஸ்லிம்கள் பற்றி பார்ப்பது மிக முக்கியமானது. 1949இல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஷின்ஜியாங்கின் (கிழக்கு துர்கிஸ்தான் – East Turkestan)) மீது படையெடுத்து அதனை சீனா ஆக்கிரமித்து தன் எல்லைகளை அகற்றிக்கொண்டது. இதன்மூலம் ஷின்ஜியாங் தேசத்தை தன்னுடன் கம்யூனிஸ சீனா பலவந்தமாக இணைத்து கொண்டது. அதன் பின்னர் சீனா திட்டமிட்டு கட்டம் கட்டமாக ஷின்ஜியாங் மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்றப்படுத்தி வருகின்றது. அதாவது, முஸ்லிம்களை ஒரு கம்யூனிஸ சமூகவியல் பொறியியலுக்கு உட்படுத்தி அவர்களை சிறுபான்மையாக மாற்றிவருகின்றது. ஆரம்பத்தில் சிங்கியாங் பிரதேசம் 95 சதவீதம் முஸ்லிம்களை கொண்டதாக காணப்பட்டது. பின்னர் சீனா ஹன் இன சீனர்கள் திட்டமிட்டுக் குடியேற்றியது. பல நூறு குடியேற்றங்களை உருவாக்கி முஸ்லிம்களை தங்களின் சொந்த மண்னில் அதிகாரமற்ற பொம்மைகளாக்கியது. பல நூறு இராணுவ கிராமங்களை அங்கு உருவாக்கி இராணுவ குடும்பங்களை அங்கு குடியமர்த்தியது. அவை காலபோக்கில் ஹன் சீனர்களை கொண்ட சிவில் கிராமங்களாக உருவெடுத்தன. இப்போது சுமார் 2 கோடி 40 இலட்சம் மக்கள் தொகை கொண்ட சிங்கியாங்கில் 57 சதவீதம் தான் முஸ்லிம்கள், 45 சதவீதம் ஹன் எனும் சீனர்கள். 1949 இல் ஹன் சீனர்கள் தொகை வெறும் 6 சதவீதமாகத்தான் காணப்பட்டது
திட்டமிட்ட குடியேற்றம் சுமார் 60 ஆண்டுகளில் சீனர்களை 8 மடங்காக அதிகரிக்கச் செய்திருக்கின்றது. மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் பலம் திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் பாரிய மாறுதல்களை செய்துள்ளமையால் இன்று முஸ்லிம்கள் பலவீனமான நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சீனா தனது இராணுவ இயந்திரத்தை மாத்திரமே சிங்கியாங்கை நிர்வகிப்பதற்கு அனுப்பவில்லை. மாறாக சீனா திட்டமிட்டு சீனர்களை குடியேற்றியது. முஸ்லிம்களின் கையிலிருந்த நகரங்களும் கிராமங்களும் சிறிது சிறிதாக விலைக்கு வாங்கப்பட்டன. அவர்களின் பொது நிலங்கள் சீனாவின் அரச சொத்தானது. அவை வெளியூர் சீன மக்களுக்கு வழங்கப்பட்டன. ஹன் சீனர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அப்பகுதியில் அதிகரிக்கும்படி திட்டமிட்டு சீனர்களை குடியேற்றியது. இப்போதைய 45 சதவீதம் ஹன் சீனர்களின் தொகையானது அங்குள்ள ஆக்கிரமிப்பு இராணுவ சிப்பாய்களையோ, அவர்களது குடும்பத்தினரையோ, இடம்பெயர்ந்து அங்கு வசிக்கும் தொழிலாளர்களையோ உள்ளடக்கியதல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சீனா, முஸ்லிம்கள் அல்லாத வெறும் 6 வீதமிருந்த ஹன் சீனர்களை 45 சதவீதம் என்ற அளவுக்கு செயற்கையாக உருமாற்றி முஸ்லிம்களின் பெரும்பான்மையை சிறுபான்மையாக மாற்றியமைத்தது. கம்யூனிஸ சமூக பொறியியல் வெற்றிபெற்றுவருகின்றது. சிங்கியாங்கில் தலைநகர் பெரும்பான்மை ஹன் சீனர்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன. மக்கள்தொகை பொறியியல் என்ற முறைக்கு உட்படுத்தி முஸ்லிம்கள் மேலும் மேலும் தொடர்ந்தும் சிறுபான்மையாக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றனர். நாட்டிற்கு முன்பாக தங்களது மார்க்கத்தை முதன்மைப்படுத்தக் கூடாது, பதினெட்டு வயதுக்குட்பட்டோரை தொழுமாறு அறிவுறுத்தக் கூடாது, இமாம் அரசாங்கத்தின் அனுமதியின்றி எதையும் பேசக்கூடாது, மஸ்ஜித்களில் மக்கள் கூடியிருக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் சாதாரணமாக நடைமுறையில் உள்ளன.
இந்தப் பகுதியில் எழும்பும் சுதந்திர கோஷத்தை ஒடுக்கிவிட அங்கு ஹன் இன மக்களை அதிகளவில் குடியமர்த்தி வருகின்றது என்பது வெளிப்படையானது. அங்கு கடந்த பல ஆண்டுகளாக சிங்கியாங் மக்கள் அறிந்த தங்களுடைய தாய்மொழியும், அரபிமொழியையும் பின்தள்ளி சீன பெரும்பான்மையினரால் பேசப்படும் மாண்டரின் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைவாய்ப்புகள் உட்பட அனைத்து அரச கருமங்களும் இடம்பெற்றுவருகின்றன. இது முஸ்லிம்கள் பொருளாதார ரீதியிலும் பாரிய பின்டையை காண காரணமாகியுள்ளதுடன், அவர்கள் தமது வாழ்வை திகிலுடன் கடத்தவேண்டியுள்ளது. இந்த தகவல்கள் வெளிவராதவகையில் சீன கம்யூனிஸ பெருச்சாளிகள் பார்த்துக்கொள்கின்றன என்கின்றனர் முஸ்லிம் செயற்பாட்டாளர்கள். இதேவேளை, சீன அரசு தனக்கு சாதகமான முஸ்லிம் பெயர்தாங்கி ஊதுகுழல்கள் மூலம் முஸ்லிம்கள் அங்கு சுதந்திரமாக எந்த அடக்குமுறையுமின்றி வாழ்வதாகக் காட்ட முயல்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவற்றின் காரணமாக சிங்கியாங் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கை மீது அதிக ஈர்ப்பு காட்டுவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர் .
இதை காரணமாக காட்டி சீனா தனது மூர்க்கமான அடக்குமுறையை இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் பிரயோகித்து வருகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பும் சீனா மீது கடுமையான கண்டனைத்தை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
-VIdivelli