- சுசித்திரா மொகந்தி
குஜராத்தில் 2002 -– 2006 காலகட்டத்தில் நடந்த 17 என்கவுண்டர்கள் பற்றி விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹர்ஜித் சிங் பேடி கமிட்டி, அந்த சம்பவங்களில் மாநிலத் தலைவர்கள் யாருக்குமோ அல்லது அப்போதிருந்த உயரதிகாரிகள், உயர் பதவி வகித்தவர்கள் யாருக்குமோ தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லையென்று கூறியுள்ளது.
17ஆவது மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் பா.ஜ.க.வுக்கு இது பெரிய நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.
இருந்தபோதிலும், மூன்று என்கவுண்டர்களில் தவறு நடந்திருப்பதாகத் தெரிவதால் அந்த வழக்குகளில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் பற்றி மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென்றும் அந்தக் கமிட்டி கூறியுள்ளது.
இந்த மூன்று சம்பவங்களிலும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
2002 முதல் 2006 வரையில் குஜராத் மாநிலத்தை நரேந்திர மோடி ஆட்சிசெய்த காலத்தில் நடந்த 17 என்கவுண்டர் சம்பவங்கள் நடந்தன.
ஏற்கெனவே காவல்துறையின் காவலில் இருந்தவர்கள் உட்பட, பலரும் திட்டமிடப்பட்ட என்கவுண்டர்கள் மூலம் கொல்லப்பட்டார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மூன்று என்கவுண்டர்கள் போலியாக நடத்தப்பட்டவை என்று பேடி கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு, அந்த சம்பவங்களில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மூன்று வழக்குகளிலும் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும்” என்று பிரபல கிரிமினல் வழக்கறிஞர் கீத்தா லூத்ரா பி.பி.சி.யிடம் தெரிவித்தார்.
முஸ்லிம் தீவிரவாதிகளை குறிவைத்து கொலைசெய்த சம்பவங்களில் மாநில அரசு கைகோர்த்து செயற்பட்டதென்று முன்னாள் டி.ஜி.பி.யான ஆர்.பி. ஸ்ரீகுமார் கூறிய தீவிர குற்றச்சாட்டுகளை பேடி கமிட்டி நிராகரித்துவிட்டது.
சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டது போல தெரியவில்லை என்று கமிட்டியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர்களில் கொல்லப்பட்டவர்கள் வெவ்வேறு சமூகத்தவர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் மீது கிரிமினல் குற்றப் பதிவுகள் இருந்தன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டில் பத்திரிகையாளர் பி.ஜி. வர்கீஸ், பிரபல பாடலாசிரியர் ஜாவித் அக்தர், மனித உரிமைகள் ஆர்வலர் ஷப்னம் ஹஸ்மி ஆகியோர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
2012இல் அக்தர், வர்கீஸ் ஆகிய மனுதாரர்களின் முறையீடுகளைக் கேட்டறிந்த நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.எஸ். பேடியை தலைவராகக் கொண்ட கண்காணிப்பு கமிட்டியை அமைத்து, 2002 முதல் 2006 வரையிலான காலத்தில் குஜராத் மாநிலத்தில் நடந்த என்கவுண்டர் மரணங்கள் பற்றி விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டது.
பேடி கமிட்டி 2018 பெப்ரவரி மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
விசாரணை நடத்திய 17 என்கவுண்டர் சம்பவங்களில், மூன்று சம்பவங்கள் போலியானவையென முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சம்பவங்களில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்றும் அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பி.பி.சி. வசம் கிடைத்துள்ள பேடி கமிட்டி அறிக்கை நகலின்படி, “சமீர் கான், ஹாஜி இஸ்மாயில், காசிம் ஜாபர் ஹுசேன் ஆகியோர் போலி என்கவுண்டர்கள் மூலம் கொல்லப்பட்டிருப்பதாக சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் மூலம் தெரிய வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
ஆய்வாளர் அந்தஸ்திலுள்ள மூன்று அதிகாரிகள் உட்பட காவல்துறை அதிகாரிகள் 9 பேரின் பெயர்களை கமிட்டி குறிப்பிட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்த வழக்குகளில் எந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர்வதற்கு அந்தக் கமிட்டி பரிந்துரை செய்யவில்லை.
இந்த அறிக்கை குறித்து சந்தேகப்படுவதற்கு எந்தக் காரணமும் கிடையாதென்று முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான மோகன் பராசரன் பி.பி.சியிடம் தெரிவித்தார்.
“முஸ்லிம்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டார்கள் என்று புகார் கூறப்பட்ட நிலையில், முஸ்லிம்கள் குறிவைத்துக் கொல்லப்படவில்லை என்று பேடி கமிட்டி கூறியிருப்பது நல்ல விஷயம். இப்போது மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் உள்ளிட்டோரின் தரப்புகளிடம் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தும்” என்று பராசரன் தெரிவித்தார்.
பேடி கமிட்டி அறிக்கை / கண்டறிந்த விஷயங்களை இரகசியமாக வைக்க வேண்டுமென்று குஜராத் அரசு விடுத்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், பேடி கமிட்டியின் அறிக்கையை இந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் மனுதாரர்களுக்கு அளிக்க வேண்டுமென்று கடந்த வாரம் உத்தரவிட்டது.
மூன்று போலி என்கவுண்டர் வழக்குகள் என்ன?
மூன்று வழக்குகள் சரியானவற்றைப் போலத் தெரியவில்லை என்று பேடி கமிட்டி முடிவு செய்துள்ளது. அவற்றில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மூன்று சம்பவங்களின் சிறு குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
2002 ஆம் ஆண்டில் காவல் துறையினரின் பாதுகாவலில் இருந்த காசிம் ஜாபர் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் புகார் இதில் ஒரு நிகழ்வாக நீதிபதி பேடி கமிட்டியால் குறிப்பிடப் பட்டுள்ளது. காவல் துறையினர் இரும்புக் கம்பிகள், சேலைகள், கயிறுகள் வைத்திருந்ததைப் பார்த்ததாக, கமிட்டி முன்பு ஆஜரான சாட்சிகள் கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவரும் அவருடைய சகாக்களும் எந்தக் கிரிமினல் நடவடிக்கையிலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதால், அவர்களை கிரிமினல்கள் என்று காட்டுவதற்கு காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. 2006 ஏப்ரல் 13 ஆம் திகதி ராயல் ஹோட்டலில் வைக்கப்பட்டதையே நியாயப்படுத்த முடியாது” என்று தனது அறிக்கையில் பேடி கூறியுள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ரூபா 14 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று 2013 நவம்பர் 21 ஆம் திகதியிட்ட உத்தரவில் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
ஹாஜி இஸ்மாயில் குறித்த இரண்டாவது என்கவுண்டர் வழக்கில், கண்காணிப்பு கமிட்டி முன்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை என்பதால் காவல் துறையினர் மீது சந்தேகம் எழுகிறது. தடயவியல் துறையின் ஆதாரங்களிலும் குறைபாடுகள் இருப்பதாக கமிட்டி கண்டறிந்துள்ளது.
சமீர் கான் குறித்த மூன்றாவது என்கவுண்டர் சம்பவம் 2002இல் நடந்திருப்பதாக நீதிபதி பேடி கமிட்டி குறிப்பிட்டுள்ளது. அவர் ஜெய்ஷ்-முகமது (JeM) தீவிரவாதி என்றும், அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட மிக முக்கிய நபர்களைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டினாரென்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இத்துடன் சமீரின் குடும்பத்துக்கு ரூபா 10 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
நன்றி: பி.பி.சி தமிழ்.
-Vidivelli