ஹஜ் கடமை முஸ்லிம்களின் இறுதிக் கடமையாகும். பொருளாதார வசதிகளும் உடல் நலமும் உள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அனைவரும் தமது வாழ்நாளில் ஒரு தடவையேனும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் தற்போது முஸ்லிம் சமய விவகாரங்களுக்கென்று தனியான ஓர் அமைச்சு இயங்கிவருவதால் இவ்வமைச்சு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு வருடாந்தம் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தாலும் குறிப்பிட்ட ஒரு தொகையினருக்கே ஹஜ் வாய்ப்பு கிட்டுகிறது. சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு, இலங்கைக்கு வழங்குகின்ற ஹஜ் கோட்டாவின் அடிப்படையிலேயே ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது.
இவ்வருடம் இலங்கைக்கு சவூதி ஹஜ் அமைச்சினால் 3500 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி கிட்டியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் சவூதி ஹஜ் அமைச்சரும் இலங்கையின் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமும் நேற்று முன்தினம் திட்கட்கிழமை கைச்சாத்திட்டிருக்கிறார்கள்.
கடந்த வருடம் இலங்கைக்கு 2800 ஹஜ் கோட்டாவே வழங்கப்பட்டது. இவ்வருடம் இலங்கைக்கு 3000 கோட்டாவை வழங்குவதற்கே சவூதி ஹஜ் அமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. என்றாலும் நேற்று முன்தினம் சவூதி அரேபியா ஜித்தாவில் அமைச்சர் ஹலீமுக்கும் சவூதி ஹஜ் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து ஹஜ் கோட்டா 500 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ஹஜ் கோட்டா அதிகரிக்கப்பட்டாலும் ஹஜ் கடமைக்காக விண்ணப்பித்தவர்களில் கணிசமானோர் தமது பயணத்தை உறுதி செய்வதில் தயக்கம் காட்டுவதை அவதானிக்க முடிகிறது.
. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அண்மையில் ஹஜ் விண்ணப்பதாரிகளில் 3000 பேருக்கு தங்கள் பயணத்தை மீள கையளிக்கப்படும் பதிவுக் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி உறுதி செய்யுமாறு அறிவித்திருந்தது. ஆனால் 3000 பேரில் 600 க்கும் குறைவானவர்களே தங்கள் பயணத்தை உறுதி செய்திருந்தனர். இந்நிலையில் ஹஜ் கடமைக்காக விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் தங்கள் பயணங்களை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்யுமாறு கடிதங்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சுமார் 4000 பேருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்களில் எத்தனை பேர் தங்கள் பயணங்களை உறுதி செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
யாத்திரிகர்கள் பயணத்தை உறுதி செய்வதில் இவ்வாறு தயக்கம் காட்டுவதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை திணைக்களம் கண்டறிய வேண்டும். திணைக்களம் தற்போது யாத்திரிகர்களைத் தெரிவு செய்யும் முறைமையில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்றும் மீள்பரிசீலிக்க வேண்டும்.
ஹஜ் செய்வதற்கென ஆர்வத்துடன் விண்ணப்பத்த பல்லாயிரக் கணக்கானோரில் மிகச் சிலரே இவ்வருடத்திற்கான தமது பயணத்தை இதுவரை உறுதி செய்திருக்கார்கள் எனில் இதன் பின்னணியில் ஏதேனுமொரு தீர்க்கமான காரணம் இருக்க வேண்டும். முகவர்கள் மீதான நம்பிக்கையீனம், 25 ஆயிரம் ரூபாவை வைப்பிலிடுவது தொடர்பான தயக்கம், இறுதி நேரத்தில் பயணத்துக்கான வாய்ப்பு மறுக்கப்படலாம் எனும் அச்சம், திணைக்களத்திற்கு நேரில் சென்று பயணத்தை உறுதி செய்ய வேண்டும் எனும் நிபந்தனை, கோட்டா பகிர்வில் உள்ள அரசியல் தலையீடுகள் போன்றன இதற்கான பின்னணிக் காரணங்களாக இருக்கக் கூடும். இது தொடர்பில் திணைக்களம் முறையான ஆய்வொன்றைச் செய்யக் கடமைப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹஜ் முகவர் நிலையங்களினால் போலியாக விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. முகவர்களின் பணத்தாசை பிடித்த இவ்வாறான செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும். இலங்கையில் ஹஜ் யாத்திரையை ஒழுங்குக்குள் கொண்டுவருவதில் முகவர்களே பாரிய தடைகளை ஏற்படுத்துகிறார்கள் என்ற கசப்பான உண்மையையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.
எனவேதான், ஹஜ் கோட்டாக்கள் அதிகரிக்கப்படுவது ஒருபுறமிருக்க, விண்ணப்பித்த யாத்திரிகர்களில் ஆர்வமுடை யோரை கண்டறியவும் பொருத்தமானவர்களுக்கு வாய்ப்பளிக்க வும் கூடிய முறை ஒன்று தொடர்பில் உடனடியாக முஸ்லிம் சமய விவகார அமைச்சும் ஹஜ் குழுவும் திணைக்களமும் கவனம் செலுத்த வேண்டும். நாம் மேற்சொன்னவாறு மக்களின் தயக்கத்திற்கான காரணத்தைக் கண்டறிய முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli