தடைகளுக்குள்ளாகியுள்ள காஸா பள்ளத்தாக்கில் தற்போது இடம்பெறும் தாக்குதல்களுக்கு டெல்அவிவ் அரசாங்கமே காரணமென குற்றம் சுமத்தியுள்ள பலஸ்தீன இயக்கமான ஹமாஸ், ஆக்கிரமிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளில் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடத்தப்படுமானால் ஹமாஸ் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்துமென அவ்வமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவோருக்கு எதிராக முட்டாள்தனமாக தாக்குதல் நடத்துதல், துப்பாக்கிப் பிரயோகம் செய்தல் மற்றும் எதிர்ப்புகள் மேற்கொள்ளும் இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்துதல் இவை தொடருமானால், அதற்கான பின் விளைவுகளை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இராணுவம் எதிர்கொள்ள வேண்டுமென கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஹமாஸ் அமைப்பின் பேச்சாளர் பௌஸி பர்ஹெளம் தெரிவித்துள்ளார்.
காஸாவில் இந்த நிலையினை மேலும் அதிகரிப்பது நெருப்புடன் விளையாடுவதற்கு சமமானதாகும். இஸ்ரேலுக்கும் அதன் மக்களுக்கும் பாதுகாப்பினை அது பெற்றுத்தராது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முற்றுகைக்குள்ளாகியுள்ள காஸா பள்ளத்தாக்கின் பல இடங்கள் மீது கடந்த சனிக்கிழமை இஸ்ரேலிய இராணுவ விமானங்கள் மேற்கொண்ட தாக்குதல்களையடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய யுத்த விமானங்கள் காஸா நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள ஹமாஸுக்கு சொந்தமான இராணுவத் தளத்தின் மீது குறைந்தது ஒரு ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக பலஸ்தீன மஆன் செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
வடக்கு காஸா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பெய்த் லாஹியா மற்றும் முற்றுகைக்குள்ளாகியுள்ள கான் யுனுஸ் நகரிலுள்ள மற்றுமொரு இடம் என்பன இதன்போது இலக்கு வைக்கப்பட்டிருந்தன.
இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் தீப்பிளம்புகள் ஏற்பட்டன. எனினும் உயிரிழப்புக்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.
பொதுமக்களையே பிரதான இலக்காக வைத்து காஸா பள்ளத்தாக்கில் இஸ்ரேலிய இராணுவம் அடிக்கடி குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்கின்றது. இஸ்ரேலிய அரசாங்கம் காஸாவிலுள்ள 1.8 மில்லியன் மக்களின் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கான உரிமை, பொருத்தமான சம்பளத்துடனான தொழில், போதிய சுகாதார மற்றும் கல்வி போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli