மத்திய துருக்கியில் காணப்படும் ஆயிரக்கணக்கான தொன் நிறை கொண்ட தங்கத்தினை சுத்திகரிப்பதற்கு ஏதுவான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக வெனிசுவெலா குழுவொன்றினை துருக்கிக்கு அனுப்பி வைத்துள்ளது.
மேற்படி தூதுக்குழு உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ள துருக்கியின் கோரும் மாகாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடந்த திங்கட்கிழமையன்று பல்வேறு துருக்கிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. ஒப்பந்தத்தின் விபரங்கள் தொடர்பில் வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மடுரோவுக்கு அறிவிக்கப்படும் என துருக்கியின் அக்சாம் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
புதன்கிழமையன்று துருக்கிக்கு விஜயம் செய்யவுள்ள வெனிசுவெலா கைத்தொழில் மற்றும் தேசிய உற்பத்தி அமைச்சர் ஒப்பந்தத்தை பூர்த்தி செய்யவுள்ளார்.
மடுரோவின் உத்தரவுக்கமைவாக வெனிசுவெலா மத்திய வங்கி 2018 ஆம் ஆண்டு துருக்கியின் தங்கத்தினை சுத்திகரிக்கும் நடவடிக்கையினை ஆரம்பித்தது.
ஐக்கிய அமெரிக்காவினால் தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு வெனிசுவெலா அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிவித்து பலசுற்று தடைகளின் கீழ் அந்நாட்டினை கொண்டு வந்ததன் மூலம் பொருளாதார யுத்தம் என்ற எல்லை வரை வெனிசுவெலா சென்றிருந்தது.
1999 ஆம் ஆண்டு சோசலிஸ ஜனாதிபதியான ஹியூகோ சாவேஸ் பதவிக்கு வந்ததிலிருந்து வெனிசுவெலாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவுகள் பதற்றம் நிறைந்ததாகவே காணப்படுகின்றன.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முதன் முதலாக 2015 ஆம் ஆண்டு ஏழு வெனிசுவெலா அதிகாரிகள் மீது வெனிசுவெலா மக்களின் மனித உரிமைகளை மீறுவதில் தொடர்புபட்டுள்ளதாக தடைவிதிப்பதற்கு உத்தரவிட்டார்.
அவருக்குப் பின்னர் பதவிக்கு வந்த டொனால் ட்ரம்ப் தென் அமெரிக்க நாடுகளின் தங்க ஏற்றுமதிக்கு குறுக்கீடு செய்வதாகத் தெரிவித்து மடுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு 2018 நவம்பர் மாதம் நிறைவேற்றுக் கட்டளையில் கையொப்பமிட்டார்.
வெனிசுவெலா அரசாங்கத்திற்காக பில்லியன்கணக்கான டொலர்களைப் பரிமாற்றம் செய்வதற்கான வலையமைப்பில் பணியாற்றிய தனிநபர்களுக்கு எதிராக இவ்வாண்டு ஜனவரி மாத ஆரம்பத்தில் அமெரிக்கா புதிய தடைகளை விதித்தது.
கடந்த டிசம்பர் மாதம் வெனிசுவெலாவுக்கு விஜயம் செய்திருந்த துருக்கிய ஜனாதிபதி அர்துகான் இந்தத் தடைகளை விமர்சித்திருந்தார். தடைகள் மூலமாக தனது நிருவாகத்தை கவிழ்ப்பதற்கு அமெரிக்க முனைவதாக மடுரோ குற்றம்சாட்டுகின்றார்.
இவ்வாறான தடைகள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறுபவை எனத் தெரிவித்து அவற்றிற்கு எதிராக வெனிசுவெலா அவ்வமைப்பில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளது.
-Vidivelli