நாட்டில் இடம்பெறும் மனித படுகொலைகளுக்கு பாதாள உலக கோஷ்டிகளே காரணம். கொலைகளை தடுக்க பொலிசாரின் செயற்பாடுகளுக்கு இராணுவ ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் தாம் தயாராக இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நேற்று கண்டி அஸ்கிரிய, மல்வத்து தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
நாட்டில் இப்போது இடம்பெற்றுவருகின்ற குற்றங்கள் மற்றும் கொலைகளை தடுக்க அரசாங்கமாக நாம் இப்போது சில மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளின் உதவியுடன் முக்கியமான சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கும் அப்பால் மனித படுகொலைகளை தடுக்கவும், பாரிய குற்றங்களை தடுக்கவும் இராணுவத்தின் ஒத்துழைப்புகளையும் வழங்கி செயற்படவும் நாம் அங்கீகாரம் கொடுத்துள்ளோம். பொலிசாருக்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு வேண்டும் என்றால் உடனடியாக இராணுவத்தின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள முடியும்.
குறிப்பாக, பாதாள உலக கோஷ்டிகளின் செயற்பாடுகள்தான் இந்தப் படுகொலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளன. சட்டவிரோத ஆயுதக் குழுக்கள் மோதலில் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். ஆகவே பாதாள உலக கோஷ்டிகளின் செயற்பாடுகளை தடுக்க வேண்டும். பாதாள உலக கோஷ்டிகளை கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இப்போதும் இரகசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
விசேடமாக பொலிசாரே இப்போது அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் ஒருநாளில் அல்லது ஒரு மாதத்தில் இவற்றை முடிவுக்கு கொண்டுவர முடியாது. ஆகவே இவற்றை கட்டுப்படுத்த சிறிது காலம் தேவைப்படுகின்றது. எனினும் விரைவில் நாட்டில் அமைதியான சூழல் ஒன்றினை உருவாக்க முடியும். அதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுத்து வருகின்றோம்.
கடந்த காலங்களில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் புலிகளின் ஆயுதங்கள் இன்று பாதாள உலக கோஷ்டிகளின் கைகளுக்கு வந்துள்ளன. இந்தப் பிரச்சினையே எம்மை அதிகம் பாதித்துள்ளது. ஆகவே இவற்றை ஆராயவும் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் வேலைத்திட்டம் ஒன்றினை முன்வைத்துள்ளார். அத்துடன் பொலிஸ் மற்றும் முப்படைகளின் உதவியுடன் வேறு சில வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli