கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 36 பேரிடம் உம்ரா பயணத்துக்கான முழுமையான கட்டணங்களை அறவிட்டு இறுதி நேரத்தில் பயணிகளைக் கைவிட்டு தலைமறைவாகியிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த உப முகவர், அம்ஜா முகவர் நிலையத்துக்கு வழங்க வேண்டிய 36 இலட்சம் ரூபா பணத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
குறிப்பிட்ட உம்ரா பயணிகளுக்கான விமான டிக்கெட்டுக்களை காத்தான்குடி உப முகவர் அம்ஜா டிரவல்ஸில் ஏற்பாடு செய்திருந்த விமான டிக்கெட்டுகளுக்குரிய பணம் இறுதிநேரத்தில் வழங்கப்படாமையினாலே உம்ரா பயணிகள் நிர்க்கதிக்குள்ளாகினர். அவர்கள் விமான நிலையத்திலிருந்து திருப்பியனுப்பப்பட்டு மாபோலை பள்ளிவாசலில் ஒருவார காலம் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட காத்தான்குடி உப முகவர் தலைமறைவாகியிருந்தார். தலைமறைவாகிய முகவரின் மனைவி மற்றும் உறவினர்கள் பயணிகளின் விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணங்களை செலுத்துவதாக அம்ஜா டிரவல்ஸுக்கு உறுதியளித்ததாலேயே பயணிகள் உம்ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்கள பணிப்பாளர் எம்.ஆர்.எம் மலிக் தெரிவித்திருந்தார்.
இந்நிலைலேயே நேற்று முன்தினம் தலைமறைவாகியிருந்த காத்தான்குடி முகவருக்கும் அம்ஜா டிரவல்ஸ் உரிமையாளருக்கும் இடையில் இது தொடர்பான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பினை அரச ஹஜ் குழுவின் உறுப்பினர் மெளலவி எம்.எஸ்.எம் தாஸிம் ஏற்பாடு செய்திருந்தார்
இச்சந்திப்பின்போதே குறிப்பிட்ட உப முகவர் 36 இலட்சம் ரூபாவை அம்ஜா டிரவல்ஸுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
-Vidivelli