மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியிருக்கிறேன். மாகாண சபை தேர்தலை தாமதம் இல்லாமல் உடனடியாக நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு கதைகளை சோடித்து மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் முயற்சித்து வருகிறார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான மாகாண மட்டத்திலான கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ஊவா மற்றும் மத்திய மாகாண தொகுதி அமைப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்:
அவர் தொடர்ந்தும் கலந்துரையாடலின்போது உரையாற்றுகையில்;
‘தற்போது வரை 6 மாகாண சபைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பித்துப்போயுள்ளன. இது ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மூலம் எதிர்பார்த்த இலக்குகளுக்கு முரணானதாகும். மாகாண சபைத்தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியிருக்கிறேன். மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்தி மக்களின் வாக்குரிமையான ஜனநாயகத்தை உறுதி செய்ய வேண்டும்.
புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு 3 வாரங்கள் கடந்துவிட்டன. அமைச்சுக்களின் கீழுள்ள கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தலைவர்களும் பணிப்பாளர் சபைகளும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இது தொடர்பில் சிலர் ஜனாதிபதி காரியாலயத்தையே குறை கூறுகிறார்கள். ஆனால் இது ஜனாதிபதி காரியாலயத்தின் குறையல்ல.
இந்த நிலைமைக்கு அந்தந்த அமைச்சுக்களே பொறுப்புக்கூற வேண்டும். நியமனங்களுக்கான சிபாரிசுக்காக பிரதமரின் காரியாலயத்தின் மூலம் ஜனாதிபதி காரியாலயத்துக்கு இதுவரை அனுப்பி வைக்கப்படாமையே தாமதத்திற்கு காரணமாகும். இதற்கான பொறுப்பினை ஜனாதிபதி காரியாலயம் ஏற்கத் தயாராக இல்லை.
சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு தலைவர்களையும் பணிப்பாளர் சபைகளையும் நியமிக்கும்போது அது தொடர்பான சிபாரிசுகளைச் செய்வதற்கு கமிட்டியொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் கமிட்டியின் சிபாரிசுகளின் படியே நியனமங்கள் வழங்கப்படும் என்றார். கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர்.
-Vidivelli