தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து தனது குடும்பத்தினரைவிட்டும் பிரிந்து வெளியேறிய றஹாப் அல்குனூன் என்ற 18 வயது சவூதி அரேபிய யுவதிக்கு கனடா புகலிடம் வழங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை டொரொன்டோ விமான நிலையத்தில் வைத்து கனடாவின் பெண் வெளிநாட்டமைச்சர் கிரிஸ்டியா பிரீலேண்டினால் அவர் வரவேற்கப்பட்டார்.
இவர் ஒரு மனோதிடமிக்க புதிய கனேடியர் என பிரீலேண்ட் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். இதன்போது அல்குனூன் புன்னகைத்தவாறு அமைச்சரின் அருகில் நின்றுகொண்டிருந்தார்.
றஹாப் மொஹம்மட் அல்குனூனை ஏற்றுக்கொள்ளுமாறு அதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை கனடா ஏற்றுக்கொண்டதாக கடந்த வெள்ளிக்கிழமை கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்திருந்தார்.
றஹாப் அல்குனூன் பேங்கொக் விமான நிலைய ஹோட்டல் அறையிலிருந்து வெளியேறுவதற்கும் தனது குடும்பத்தினரிடம் அனுப்பி வைக்கப்படுவதற்கும் மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்தார். எனினும் அவர் எவ்விதத்திலும் தம்மால் பாதிப்புக்குள்ளாக்கப்படவில்லை என றஹாப் அல்குனூனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உலகிலுள்ள பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் உதவும் கனடாவின் கொள்கையின் ஒரு பகுதியாகவே அல்குனூனின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதென்ற தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரீலேண்ட் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
பெண்கள் மீதான அடக்குமுறை என்பது ஒரு நாளில் தீர்த்து வைக்கப்படும் பிரச்சினையல்ல, இருளை நோக்கி சாபமிடுவதைவிட ஒற்றை மெழுவர்த்தியை ஏற்றி வைப்பது சிறந்ததாகும் எனத் தெரிவித்த அவர், ஒரு பெண்ணை, தனி நபரை பாதுகாக்க எம்மால் முடியுமாயின் அதுவே சிறந்த செயற்பாடாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
தனக்கு உதவியோர் அனைவருக்கும் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் றஹாப் அல்குனூன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். எனக்கு உதவியோருக்கும் எனது உயிரைக் காத்தோருக்கும் நன்றிகள் என அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
-Vidivelli