பாரசீக வளைகுடா அரபு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையினை மிகவும் தரக்குறைவாக மதித்து சவூதி அரேபியாவின் திட்டமிடலின் கீழ் எமது நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் சீரடைவதற்கு இன்னும் பல ஆண்டுகள் செல்லும் என கட்டார் முன்னாள் பிரதமர் ஷெய்க் ஹமாட் பின் ஜாஸ்ஸிம் பின் ஜபோர் அல் தானி கடந்த சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் கொள்கையில் ஒருதலைப்பட்சமாக சவூதி அரேபியா எடுத்த முடிவு ஒருகாலத்தில் சக்திமிக்க அமைப்பாக இருந்த ஜீசீசீ என அறியப்பட்ட பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள அரபு நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பை நலிவடையச் செய்து விட்டது எனவும் தெரிவித்தார்.
றஷ்சியா அல்-யௌம் உடனான நேர்காணலின்போது ‘வளைகுடாவின் கனவுகள் சிதைந்துவிட்டன’ எனத் தெரிவித்த ஷெய்க் ஹமாட் ‘ஜீசீசீ அழிவடைந்துள்ளது, மீள நம்பிக்கையினைக் கட்டியெழுப்புவதற்கு மேலும் பல ஆண்டுகள் தேவைப்படும்’ எனவும் தெரிவித்தார்.
18 மாதங்களுக்கும் மேற்பட்ட கட்டார் மீதான சவூதி அரேபியா மற்றும் அதன் தோழமை நாடுகளினது பொருளாதார மற்றும் இராஜதந்திரத் தடைகள் தோஹா மீது பொருளாதார ரீதியாவும் அரசியல் ரீதியாகவும் எந்தப் பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை, அது தோல்வி கண்டுள்ளது. வெளிநாட்டுக் கொள்கையில் தன்னிச்சையான முடிவின் காரணமாக றியாத் தற்போது தளம்பல் நிலையினைச் சந்தித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
கட்டார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த நாடுகளால் அதற்கு ஆதரவான எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்க முடியாமல் போயுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர் தடைகளிலிருந்தும் சோடிக்கப்பட்ட நெருக்கடியிலிருந்தும் மீள்வதற்கும் கட்டார் சிறப்பாகச் செயற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல பிரச்சினைக்குரிய தீர்மானங்களுக்கு பின்னணியில் அவரே இருந்துள்ளார். அவருக்கு சிறந்த ஆலோசகர்கள் அவசியமாகும் எனவும் தெரிவித்தார்.
யெமனில் சவூதி அரேபியாவினால் நடத்தப்படும் யுத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், அது உலகின் மிகவும் மோசமான மனிதப் பேரவலம் எனத் தெரிவித்ததோடு, 2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட மிகத் தவறான முடிவுமாகும் என்றார்.
யெமன் மீது யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும் என யார் நினைத்தார்களோ அவர்கள் எவ்வாறு நித்திரை செய்கிறார்களோ என்பது எனக்குத் தெரியவில்லை எனவும் ஷெய்க் ஹமாட் தெரிவித்தார்.
-Vidivelli