இஸ்ரேலிய யுத்த விமானங்கள் டமஸ்கஸை நோக்கி ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவற்றுள் கணிசமானவை சிரிய விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
டமஸ்கஸ் விமான நிலையத்திலுள்ள களஞ்சியசாலைகளுள் ஒன்று மாத்திரமே இத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி சனா செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 11.15 இற்கு இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
விமான நிலையத்தின் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெறுவதாக போக்குவரத்து அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இரவு நேரத்தில் வானில் பிரகாசமான வெளிச்சமொன்று செல்வதை பாதுகாப்புத் தரப்பின் எதிர்த் தாக்குதல் எனத் தெரிவித்து காணொலிகளை சிரிய அரசாங்க ஊடகம் ஒளிபரப்பியது. அவற்றுள் ஒரு காணொலியில் வெடிப்புச் சத்தமும் கேட்டது.
2011 ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து ஜனாதிபதி பஷர் அல்-அஸாத்துக்கு ஆதரவு வழங்கிவரும் ஈரானின் செல்வாக்கை மழுங்கடிக்கச் செய்யும் வகையில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
-Vidivelli