கடந்த மாதம் ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக நாட்டின் உண்மைகளைக் கண்டறியும் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகமானது என மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட மோதல்கள் காரணமாக குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பாண் விலை அதிகரிப்பின் காரணமாக ஆத்திரமுற்ற மக்கள் கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தனர். அதிலிருந்து நாடு முழுவதும் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீரை பதவி விலகுமாறு கோரி போராட்டங்கள் நடத்தப்படுவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பதில் நடவடிக்கையாக கண்ணீர் புகைக் குண்டுகளையும் உண்மையான துப்பாக்கி ரவைகளையும் பயன்படுத்தி பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சூடானின் இரண்டாவது பெரிய நகரான ஒம்டுர்மன்னில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றின் மீது நோயாளிகளையும் வைத்தியர்களையும் இலக்கு வைத்து துப்பாக்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கார்ட்டூமில் உள்ள அல் ஜஸீரா செய்தியாளரான ஹிபா மோர்கள் தெரிவித்தார்.
யுத்தக் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தினால் தேடப்பட்டு வரும் பஷீர், 1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவப் புரட்சியினைத் தொடர்ந்து நாட்டை ஆட்சி செய்துவருகின்றார். சூழ்ச்சிக்காரர்களால் தனது அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் சூடானினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் எதிர்வரும் காலங்களில் பாதிப்புச் செலுத்தும் என அமெரிக்கா, நோர்வே, கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் இணைந்து கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு உடனடிக் காரணம் பாண் விலை அதிகரிப்பாக இருந்தபோதிலும், சூடான் கடந்த வருடத்திலிருந்து அதிகரித்த பொருளாதார நெருக்கடியினைச் சந்தித்து வருவதே பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-Vidivelli