அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் நிபுணர்குழு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

0 811

கடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபையில் அதன் வழி­ந­டத்தல் குழுவின் தலை­வ­ரான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிபுணர் குழுவின் ஐந்து அறிக்­கை­களைச் சமர்ப்­பித்து உரை­யாற்­றி­ய­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை வரை­வது தொடர்பில் அடுத்து முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய செயன்­மு­றை­களைத் தீர்­மா­னிப்­பது அர­சி­ய­ல­மைப்பு சபையின் பொறுப்பு என்று குறிப்­பிட்டார்.

தனது தலை­மை­யி­லான வழி­ந­டத்­தல்­குழு அதன் பணியை பூர்த்­தி­செய்­து­விட்­டது என்று கூறிய அவர்,  நிபுணர் குழுவின் அறிக்­கையில் உள்­ள­டங்­கி­யுள்ள விட­யங்­களில் சகல கட்­சி­க­ளி­னாலும் இணக்­கப்­பாட்­டுக்கு வரக்­கூ­டிய விட­யங்­களைத் தெரி­வு­செய்து கருத்­தொ­ரு­மிப்­புக்கு வந்து அர­சி­ய­ல­மைப்பு வரை­வொன்றை அர­சி­ய­ல­மைப்பு சபை தயா­ரிக்­க­லா­மென்று விளக்­க­ம­ளித்தார்.

2015 ஆட்சி மாற்­றத்­துக்குப் பிறகு பல்­வேறு முரண்­பா­டுகள், தடங்­கல்­க­ளுக்கு மத்­தியில் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வந்த அர­சி­ய­ல­மைப்பு வரைவுச் செயன்­மு­றைகள் பிர­த­மரால் சமர்ப்­பிக்­கப்­பட்ட நிபுணர் குழுவின் அறிக்­கை­க­ளுடன் ஒரு தீர்க்­க­மான கட்­டத்­துக்கு வந்­தி­ருக்­கி­றது. அதா­வது, அந்த செயன்­மு­றை­களின் எதிர்­கால முன­னோக்­கிய நகர்­வுகள் சாத்­தி­யமா என்ற கேள்வி தற்­போ­தைய அர­சியல் சூழ்­நி­லை­க­ளுக்கு மத்­தியில் தவிர்க்­க­மு­டி­யாமல் எழு­கி­றது. முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ அர­சி­ய­ல­மைப்பு சபையில் வெள்­ளி­யன்று உரை­யாற்­றி­ய­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைவுச் செயன்­மு­றை­க­ளுக்கு தனது அணி ஆத­ரவு தரப்­போ­வ­தில்லை என்­பதை தெட்டத் தெளி­வாகக் கூறி­விட்டார்.

புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை வரையும் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்­கு­ரிய நியா­ய­பூர்­வத்­தன்மை இன்­றைய அர­சாங்­கத்­துக்கு இல்லை என்று அவர் கூறினார். புதிய தேர்­த­லொன்றில் நாட்டு மக்­களின் ஆணை­யைப்­பெற்ற பின்­னரே அர­சி­ய­ல­மைப்பு வரைவுச் செயன்­மு­றை­களை ஆரம்­பிக்க வேண்டும். பொதுத்­தேர்­த­லின்­போது இரு பிர­தான அர­சியல் அணி­களும் அவற்றின் அர­சி­ய­ல­மைப்பு வரை­வு­களை மக்கள் முன்­வைத்து அவர்கள் எந்த வரைவை அங்­கீ­க­ரிக்­கி­றார்கள் என்­பதைப் பார்க்­க­வேண்டும் என்றும் ராஜபக் ஷ வலி­யு­றுத்­தி­யதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

அவரைப் பொறுத்­த­வரை, விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான தற்­போ­தைய நிரு­வா­கத்தை சாத்­தி­ய­மா­ன­ளவு விரை­வாக கவிழ்த்­து­விட்டு புதிய பொதுத் தேர்­த­லுக்குப் போவதை நோக்­காகக் கொண்டே வியூ­கங்­களை வகுக்­கிறார். பிர­த­ம­ரும்­கூட நிபுணர் குழுவின் அறிக்­கையைச் சமர்ப்­பித்­த­வுடன் பொறுப்பு இனிமேல் தன்­கையில் என்ற தொனிப்­ப­டவே பேசி­யி­ருக்­கிறார்.

புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை வரை­வ­தற்­காக 2016 மார்ச்சில் பாரா­ளு­மன்­றத்தில் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­ன­மொன்­றை­ய­டுத்து அர­சி­ய­ல­மைப்பு சபை அமைக்­கப்­பட்­டது. அதா­வது, பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு வரைவுச் செயன்­மு­றை­க­ளுக்­காக அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றப்­பட்­டது. ஆரம்­பத்தில் சகல 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அந்த சபையில் இருந்­தார்கள். அதன் முத­லா­வது அமர்வு 2016 ஏப்ரல் 5இல் இடம்­பெற்­றது. அதன் முதல் கூட்­டத்­தி­லேயே அர­சி­ய­ல­மைப்­புடன்  தொடர்­பு­டைய  அடிப்­படை விவ­கா­ரங்­களைக் கையாள்­வ­தற்­கென்று 21 உறுப்­பி­னர்­களைக் கொண்ட வழி­ந­டத்­தல்­குழு நிய­மிக்­கப்­பட்­டது.

அடுத்து அடிப்­படை உரி­மைகள், நீதித்­துறை, நிதித்­துறை, அர­சாங்க சேவை, சட்டம் ஒழுங்கு மற்றும் மத்­திய அர­சுக்கும் பிராந்­திய நிரு­வா­கங்­க­ளுக்கும் இடை­யி­லான உற­வுகள் என்று முக்­கி­ய­மான விவ­கா­ரங்­களைத் தனித்­த­னி­யாக ஆராய 6 உப குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டன. அந்தக் குழுக்­களின் அறிக்­கை­களை பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்க 2016 நவம்பர் 19 அர­சி­ய­ல­மைப்பு சபையில் சமர்ப்­பித்தார். பிறகு வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை 2017 செப்­டம்பர் 21  சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அந்த அறிக்கை மற்றும் உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள்  தொடர்பில் 5 நாட்கள் அர­சி­ய­ல­மைப்பு சபையில் விரி­வான விவாதம் நடை­பெற்­றது. அர­சி­ய­ல­மைப்பு சபை இறு­தி­யாக 2017 நவம்பர் 8 கடை­சி­யாகக் கூடி­யது. இப்­போது ஒரு வரு­டத்­துக்கும் கூடு­த­லான காலம் கடந்த நிலையில் பிர­தமர் வழி­ந­டத்தல் குழுவின், நிபுணர் குழுவின் அறிக்­கை­களை சமர்ப்­பித்­தி­ருக்­கிறார். இவற்றில் மாகாண முத­ல­மைச்­சர்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் முன்­வைத்த யோச­னைகள் மீதான அறிக்­கையும் அடங்கும்.

அடுத்­து­வரும் நாட்­களில் நிபு­ணர்­கு­ழுவின் அறிக்கை தொடர்­பி­லான விரி­வான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் மூள­வி­ருக்கும் நிலையில் அதி­லுள்ள முக்­கி­ய­மான அம்­சங்­களைக் கவ­னிப்போம்.

பௌத்­த­ம­தத்­திற்கு அதி­மு­தன்மை இடம்­வ­ழங்­கப்­ப­ட­வேண்டும்; பௌத்த மதத்தை  பேணிப்­பா­து­காக்க வேண்­டி­யது  அர­சாங்­கத்தின் கடமை என்று நிபுணர் குழு விதந்­து­ரைத்­தி­ருக்கும் அதே­வேளை, ஏனைய மதங்­க­ளையும் கௌர­வத்­து­டனும் கண்­ணி­யத்­து­டனும் அர­சாங்கம் நடத்­த­வேண்டும் என்று கூறி­யி­ருக்­கி­றது.

நாட்டின் தேசிய கீதம் ஸ்ரீலங்கா மாதா என்றும் அதன் தமிழ் வடிவம் ஸ்ரீலங்கா தாயே என்றும் அமையும்.

உரி­மைகள் சம்­பந்­தப்­பட்ட பிரிவில் மிகவும் குறிப்­பாக அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்கும் அம்சம் காணாமல் போவ­தி­லி­ருந்து மக்­களைப் பாது­காக்­கின்ற உரி­மை­யாகும்.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்­தி­னாலும் அமைக்­கப்­ப­ட­வி­ருக்கும் இரண்­டா­வது சபை­யி­னாலும் கூட்­டாகத் தெரி­வு­செய்­யப்­ப­ட­வேண்டும். நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­யப்­ப­டு­பவர் அத்­தெ­ரி­வுக்குப் பின்னர் எந்­த­வொரு கட்­சியின் உறுப்­பி­ன­ராக இருக்­க­மு­டி­யாது. அவர் அர­சி­யலில் ஈடு­ப­டு­வதும் தடை­செய்­யப்­ப­டு­கி­றது. தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் கீழ் அல்­லது எந்­த­வொரு முன்­னைய அர­சி­ய­ல­மைப்பின் கீழும் இரு தட­வைகள் ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­வ­கித்­தி­ருக்­கக்­கூ­டி­யவர் மீண்டும் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்­கான தகு­தியைக் கொண்­டி­ருக்­க­மாட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் சாதா­ரண பெரும்­பான்­மை­யி­னாலும் உத்­தேச இரண்­டா­வது சபையில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யி­னாலும் நிறை­வேற்­றப்­ப­டக்­கூ­டிய நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மூல­மாக ஜனா­தி­ப­தியை பத­வி­யி­லி­ருந்து நீக்­க­மு­டியும். பிர­தமர், சபா­நா­யகர் மற்றும் எதிர்க்­கட்சித் தலை­வரை உள்­ள­டக்­கிய குழு ஜனா­தி­ப­தி­யொ­ருவர் பத­வியை வகிக்கப் பொருத்­த­மில்­லா­தவர் என்று ஏக­ம­ன­தாகத் தீர்­மா­னித்­தாலும் அவர் பத­வி­யி­லி­ருந்து இறங்­க­வேண்டும்.

பிர­த­மரின் ஆலோ­ச­னையின் பேரில் அமைச்­ச­ர­வையை ஜனா­தி­பதி நிய­மிப்பார். அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 30 ஆக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும். ஆனால், அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை பிர­தமர்  தீர்­மா­னிப்பார் என்றும் அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தின் நம்­பிக்­கையைக் கொண்­டி­ருக்கும் உறுப்­பினர் ஒரு­வரை பிர­த­ம­ராக  ஜனா­தி­பதி நிய­மிப்பார். அந்த நம்­பிக்கை என்­பது பாரா­ளு­மன்றத் தேர்­தலின் முடி­வு­களின் அடிப்­ப­டை­யி­லேயே தீர்­மா­னிக்­கப்­படும். பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­டு­பவர் சபையில் நம்­பிக்கை வாக்­கெ­டுப்­புக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யி­ருக்கும். பிர­தமர் ஒரு­வரின் பத­விக்­காலம் முடி­வ­டை­வ­த­றகு முன்­ன­தாக அவரின் பதவி. வெற்­றி­ட­மானால் பிர­த­மரின் கட­மை­களை மேற்­பார்வை செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை அமைச்சர் ஒரு­வரை ஜனா­தி­பதி நிய­மிக்­கலாம்.

ஒதுக்­கீட்டு சட்­ட­மூலம் இரண்டு தட­வை­களில் நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் மாத்­தி­ரமே ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்­க­மு­டியும். இல்­லை­யானால் பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வுடன் பிரே­ர­ணை­யொன்று நிறை­வேற்­றப்­பட வேண்டும்.

உத்­தேச இரண்­டா­வது சபையில் முத­ல­மைச்­சர்­களும் ஏனைய உறுப்­பி­னர்­களும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள் என்­பதால் அரசில் மாகா­ண­ச­பைகள் பெரு­ம­ளவு பாத்­தி­ரத்தை வகிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

இரண்­டா­வது சபை 55 உறுப்­பி­னர்­களைக் கொண்­டி­ருக்கும். ஒவ்­வொரு மாகாண சபை­யி­னாலும் 5 உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­டு­வார்கள். எஞ்­சிய 10 உறுப்­பி­னர்­களும் பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்படுவர். அவ்வாறு பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்படுபவர்கள் சமூகத்தின் முன்னணிப் பிரஜைகளாக இருக்கவேண்டும்.

கலப்பு தேர்தல் முறையின் மூலமாகத் தெரிவு செய்யப்படுகின்ற 233 உறுப்பினர்களைப் பாராளுமன்றம் கொண்டிருக்கும். 140 உறுப்பினர்கள் தொகுதி அடிப்படையிலான தேர்தல் மூலம் தெரிவாவர்.

உச்சநீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களுக்கு மேலதிகமாக அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்றும் அமைக்கப்படும் என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க யோசனயாகும்.

அறிக்கையின் ஆங்கிலப் பிரதியில் “ஒரு வரைவு மாத்திரமே” என்ற நீர்க்குறி காணப்படுவது நிபுணர் குழுவைப் பற்றிய மற்றுமொரு முக்கியமான அம்சமாகும். ஆனால், அரசாங்கம் அது ஒரு வரைவே அல்ல என்று அழுத்திக்கூறியிருக்கிறது.

பேராசிரியர் சூரி.ரட்ணபால, ஒஸ்ரின் புள்ளே, நவரட்ண பண்டா, என்.செல்வகுமாரன், கமினா குணரட்ன, கபில பெரேரா, சுரேன் பெர்னாண்டோ, நிரான் அங்கரெல், அசோகா குணரட்ன மற்றும் ஷமிந்திரி சப்ரமாது ஆகியோரை உள்ளடக்கியதே இந்த நிபுணர் குழுவாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.