மக்களின் அபிப்பிராயத்தை கொண்டு அதற்கமைய தாம் அரசியல் களத்தில் இறங்கவுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது தலைமையில் அடுத்த தேர்தல்களை சந்திக்க ‘வியத்மக’ அமைப்பினூடாக புதிய வேலைத்திட்டத்தை கையாள தீர்மானித்துள்ளதாகவும், இந்த நகர்வுகளுக்கு மஹிந்த ராஜபக் ஷ இணக்கம் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவும் இதற்கு இருப்பதாக அவர் முக்கிய பிரதிநிதிகளுடனான தனிப்பட்ட சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்க விஜயத்தை மேற்கொண்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இரண்டு தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில் அவர் ‘வியத்மக’ அமைப்பின் பிரதிநிதிகளுடனும் சில முக்கிய பிரதிநிதிகளுடனும் தனிப்பட்ட சந்திப்பொன்றினை முன்னெடுத்துள்ளார். தற்போதைய அரசியல் களம் குறித்து அதில் முக்கியமான கலந்துரையாடல் ஒன்றினையும் அவர் முன்னெடுத்துள்ளார். இதில் தமது அடுத்த கட்ட அரசியல் பயணம் குறித்தும் பேசியுள்ளார்.
இதன்போது தாம் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை இலக்கு வைத்து பயணிக்க வேண்டும் எனவும், கூட்டணியாகவோ அல்லது தமது அணியாகவோ களமிறங்கி அதிகாரங்களை கைப்பற்றும் முயற்சிகளை கையாள வேண்டும் என கருத்துக்களை முன்வைத்துள்ளதுடன் மக்கள் மத்தியில் தம் மீதான அபிப்பிராயங்களை பெற்றுக்கொண்டு அதில் சாதகமான தன்மைகள் காணப்படும்பட்சத்தில் அடுத்த கட்ட அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமது தலைமையில் முன்னோக்கிச் செல்லக்கூடிய சாதகமான காரணிகளை அமைத்துகொண்டால் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக் ஷ அதற்கு முழுமையான ஆதரவை வழங்க தயாராக உள்ளதாகவும் தாம் இருவரும் கலந்துரையாடியுள்ளதாகவும் அந்த சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு தமக்கு இருப்பதை குறிப்பிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் அதில் சாதகமான பதில்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அதே நிலைப்பாட்டில் இன்றும் ஜனாதிபதி உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் சில முக்கிய உறுப்பினர்களை மாத்திரம் அழைத்து புதுவருட நிகழ்வொன்றை நடாத்தியுள்ள நிலையில் அந்த நிகழ்விலேயே இந்த விடயங்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார் என்பதும் ‘வியத்மக’ அணியினர் வெகு விரைவில் புதிய வேலைத்திட்டங்கள் சிலவற்றை ஆரம்பிக்க இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
-Vidivelli