4 வருடங்களில் சுகாதார அமைச்சில் மோசடிகள்: விசாரணைக்கு ஆணைக்குழு
ஜனாதிபதியுடனான சந்திப்பில் இணக்கம் என்கிறது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
சுகாதார அமைச்சில் கடந்த நான்கு வருடங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தது.
குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சுகாதார அமைச்சில் கடந்த நான்கு வருடங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் எங்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அது தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கூடுதலான கவனம் செலுத்தியிருந்தோம். அதேபோன்று நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினோம்.
மேலும், அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பாகவும் நாங்கள் ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறினோம். சிங்கப்பூர் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் தேசியக் கொள்கையொன்றை தயாரிப்பதன் அவசியம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கினோம். எமது கோரிக்கைகள் தொடர்பில் மிகவும் அவதானமாக செவிசாய்த்த ஜனாதிபதி, சிங்கப்பூர் ஒப்பந்தம் தொடர்பாக ஆராய்ந்து பார்க்க ஜனாதிபதியின் செயலாளரின் கீழ் மேலதிக செயலாளர் ஒருவரை நியமிப்பதாக உறுதியளித்தார்.
அத்துடன் சுகாதார அமைச்சில் கடந்த நான்கு வருடங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு அமைப்பதற்கும் இணக்கம் தெரிவித்தார். இன்று திங்கட்கிழமைக்குள் வர்த்தமானி ஊடாக அது தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் எம்மிடம் குறிப்பிட்டார்.
எனவே, சுகாதார அமைச்சில் கடந்த நான்கு வருடங்களில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படும் பட்சத்தில், சுகாதர அமைச்சில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக நாங்கள் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கின்றோம். அத்துடன் கடந்த காலங்களில் அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் ஊடாக இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாகவும் வெளிப்படுத்துவோம் என்றார்.
-Vidivelli