காஸா சிறார்களின் எதிர்காலத்தை சிதைக்கும் இஸ்ரேலிய துப்பாக்கிகள்

0 1,024

ஈவிரக்கமற்ற இஸ்­ரே­லிய இராணுவத்தின் துப்­பாக்கிச் சூட்­டு­க­ளுக்கு இலக்­காகி படுகாயமடைந்து ஆறாத வடுக்க­ளுடன் கல்வியையும் தொடர முடியாதுள்ள காஸாவின் சிறுவர்கள் சிலரின் கதைகளே இவை.

காஸாவின் பதின்ம பரு­வத்தில் உள்ள  16 வயது சிறு­வ­னான அப்துல் கஸ்ஸாமுக்கு தினமும் பாட­சாலைக்குச் சென்று வரு­வதே பெரும் சவா­லாக மாறி­விட்­டது.

சில மாதங்­க­ளுக்கு முன் ஜுலிஸ் பொது மக்கள் உயர்­தரப் பாட­சா­லைக்கு நடந்தே செல்லும் கஸ்­ஸாமுக்கு வீட்­டி­லி­ருந்து பாட­சா­லையை அடைய வெறும் 15 நிமி­டங்­களே போது­மா­னது. ஆனால்  மீளத்திரும்பும் உரிமைக்காக கடந்த வருடம் மார்ச்சில் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் பங்கேற்றபோது இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தனது இரண்டு கால்­க­ளையும் இழந்த பின்னர் கஸ்­ஸாமுக்கு ஒரு இடத்தில் இருந்து இன்­னொரு இடத்­துக்கு நகர்­வதே கடி­ன­மா­கி­விட்­டது. அவ­னு­டைய வாழ்க்கை சக்­கர நாற்­கா­லிக்குள் முடங்­கிப்­போ­னது.

காஸாவின் ஷெய்க் ரெட்­வானில் உள்ள அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பில் இரண்­டா­வது  மாடியில் கஸ்ஸாம் தனது குடும்­பத்­தி­ன­ரோடு வசிக்­கிறான். மிகவும் வசதி குறைந்த சக்­கர நாற்­கா­லி­யுடன் அவ­னது இரு சகோ­த­ரர்­களின் துணை­யுடன் ஒடுக்­க­மான படிக்­கட்­டு­களில் அவன் தூக்கி வரப்­ப­டுவான். பாட­சா­லைக்குச் செல்லும் வீதி கூட ஒழுங்­கற்ற மணல் வீதி­யா­கவே காணப்­படுகின்றது. இதன் மூலம் கஸ்­ஸா­மு­டைய பய­ணங்கள் அபா­யமும் கஷ்­டமும் நிறைந்­த­தா­கவே இருப்­பதைக் காண­மு­டி­கி­றது.

குடி­யி­ருப்பை விட்டு வெளி­யே­றிய பின்னர் கஸ்­ஸா­மு­டைய சகோ­தரன் டெக்ஸி ஒன்றை ஏற்­பாடு செய்து அவனைத் தூக்கி அதில் வைப்பான். பாட­சாலை வந்த பிறகு டெக்ஸி ஓட்­டு­பவர் அவனைத் தூக்கி சக்­கர நாற்­கா­லியில் வைப்பார். பின்னர் அவன் சுய­மாக வகுப்­ப­றைக்குச் சென்று பாடங்­களைத் தொடர்வான்.

அந்தப் பாட­சா­லையில் கஸ்ஸாம் மற்றும் கஸ்­ஸ­ாமைப்­போல அங்­க­வீ­னர்­க­ளாக்­கப்­பட்ட ஏனைய மாண­வர்­க­ளுக்­கான வகுப்­ப­றைகள் அவர்­க­ளு­டைய நலன்­க­ருதி கீழ்­மா­டி­க­ளி­லேயே அமைக்­கப்­பட்­டுள்­ளன. வச­திகள் போது­மா­ன­ளவு இல்­லா­த­போதும் நூலகம், மல­ச­ல­கூடம் மற்றும் ஆய்­வு­கூடம் என்­பன அவர்­க­ளுக்குச் செல்­வ­தற்கு இல­கு­வான முறையில் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

சில நாட்­களில் கஸ்­ஸாமினால் பாட­சா­லைக்கு செல்ல முடி­யாது. மருத்­துவ சிகிச்சைகள் கார­ண­மாக அவனால் முதல் மூன்று வகுப்­பு­களில் மாத்­தி­ரமே பங்­கு­பற்ற முடியும்.

“எனக்கு இலத்­தி­ர­னியல், பொறி­யியல் துறையில் கல்வி கற்­க­வேண்டும் என்ற கனவு எப்­போதும் இருந்­தது. ஆனால் என்­னு­டைய இப்போதைய நிலை­மை­யினால் எனது வாழ்க்கை எப்­படி அமையும் என்று கூற முடி­யாது. என்­ன­வாக இருந்­தாலும் எனது குடும்­பத்­தாரின் துணை­யுடன் எனது இலக்கை என்னால் அடைய முடியும் என நினைக்­கிறேன்” என்று கஸ்ஸாம் கூறு­கிறார்.

ஆங்­கிலம் மற்றும் கணிதப் பாடங்கள் கஸ்­ஸா­முக்கு தவ­ற­வி­டப்­ப­டு­கின்றன. தனியார் கல்வி நிறு­வனம் ஒன்றில் வாரம் இரு­முறை கல்­வியைத் தொடர்­கின்­ற­போதும் அது அவ­னு­டைய இலக்கை அடைய போது­மா­ன­தல்ல.

கஸ்­ஸாமுக்கு கடந்த ஒக்­டோபர் 24 ஆம் திகதி சத்­திர சிகிச்சை ஒன்று செய்­யப்­பட்­டதால் இரண்டாம் தவணைப் பரீட்­சையை எழுத முடி­யாமல் போனது. பல வாரங்­க­ளாக வைத்­தி­ய­சா­லையில் இருந்து தற்­போது வீடு வந்து சேர்ந்­துள்ளான். முழு­மை­யாக குண­ம­டைந்த பின்­னரே பாட­சா­லைக்குச் செல்ல முடியும்.

வாழ முடி­யாத காஸா

இஸ்­ரே­லியப் படை­யி­னரால் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் காஸா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாக காஸாவில் மிகவும் தரம் குறைந்த உட்­கட்­ட­மைப்பு வச­தி­களே காணப்­ப­டு­கின்­றன. தர­மற்ற பாதை வச­தி­களே உள்ளன. ஒரு சக்­கர நாற்­காலி செல்­வ­தற்குக் கூட கடி­ன­மான பாதை­களைக் கொண்ட போக்­கு­வ­ரத்து வச­தி­களே அங்கு காணப்­ப­டு­கின்­றன.

கொல்­லப்­பட்­ட­வர்­கள் தவிர எஞ்­சி­யுள்­ள­வர்­களும் மேற்­கு­றிப்­பிட்ட பௌதீக வளங்கள் எதுவும் இன்றி உயிர்­வாழ்­வ­தற்கு உரி­மை­யில்­லா­த­வர்­க­ளாகவே இருந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். சக்­கர நாற்­கா­லியில் வாழ்க்கை நடத்­து­கி­ற­வர்கள்  இந்த நிலை­மை­யிலும் தாக்குப் பிடித்­தி­ருப்­பது ஒரு சாத­னைதான். பொது இடங்­களில் உள்ள மின் தூக்­கிகள், மல­ச­லகூ­டங்கள் என்ற அனைத்தும் இவர்­களால் உட்­செல்ல முடி­யாத அமைப்­பிலே அமைக்­கப்­பட்­டி­ருப்­பது இந்தத் தடைகளின் பாதிப்பை தெளி­வாக இனங்­காட்­டு­கி­றது.

2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐ.நா.வெளியிட்ட அறிக்­கையின்படி 1.3 மில்­லியன் அக­தி­க­ள் உள்ளிட்ட 2 மில்லியன் காஸா மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. அத்துடன் காஸா மனிதர்கள் வாழ முடியாத நகரமாக மாறியுள்ளது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முன்னெடுக்கப்பட்ட காஸாவின் மீளத்திரும்புதலுக்கான போராட்டத்தின்போது 210 பலஸ்­தீ­னி­யர்கள் இஸ்ரேலினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 19 சத­வீ­த­மா­ன­வர்கள் சிறு­வர்கள் என்று  பலஸ்­தீன சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இதன்­போது ஒரு இஸ்­ரே­லிய இரா­ணுவ வீரரும் கொல்­லப்­பட்டார்.

இந்த முரண்­பா­டு­க­ளினால் சுமார் 1800 சிறு­வர்கள் உட்­பட 10,000 பலஸ்­தீ­னி­யர்கள் காய­ம­டைந்­துள்­ளனர்.  அல் மனாவி தெரி­வித்­ததன்படி காஸா பொதுமக்கள் பாட­சா­லையில் 210 மாண­வர்கள் பதிவு செய்­துள்­ள­போதும் அதில் 92 பேர் பாட­சா­லையை விட்டும் விலகியுள்ளனர்.  அல்­லது ஏற்­பட்ட காயங்கள் ஆறா­மை­யினால் சில நேரங்களில் மாத்­திரம் பாட­சா­லைக்கு சமு­க­ம­ளிக்­கி­றார்கள்.

மே மாதம் 14 ஆம் திகதி மலாக்­கா சதுக்கத்தில் கஸ்ஸாம் உட்­கார்ந்­தி­ருந்தான். காஸா­வையும் இஸ்­ரே­லையும் பிரிக்கும் கம்­பி­யி­னாலான வேலிக்கு கிட்­டத்­தட்ட பத்து அடி தூரம்தான் இருக்கும். பகல் 1 மணி இருக்கும் போது இஸ்­ரே­லிய படையின் துப்­பாக்கி கஸ்­ஸா­மு­டைய வலது காலைத் துளைத்­தது. வலது காலில் பட்ட அதே தோட்டா காலினுள் ஊடு­ருவி இடது காலிலும் பட்­டது. அவன் கீழே விழுந்தான்.

“எங்­க­ளு­டைய நிலத்தின் முடி­வி­டத்தில் உள்ள வேலியை எவ்­வாறு அகற்­று­கி­றார்கள் என்­பதை நான் பார்த்துக் கொண்­டி­ருந்தேன். திடீ­ரென எனது வலது காலில் சுடப்­பட்­டது. அதே தோட்டா எனது இடது காலையும் துளைத்­தது” என்று கஸ்ஸாம் கூறினான்.

காஸாவின் மிகப் பெரிய பொது வைத்­தி­ய­சா­லை­யான அல் ஷிபா வைத்­தி­ய­சா­லைக்கு  கஸ்ஸாம் எடுத்துச் செல்­லப்­பட்டான். அதே நாளில் போரின்­போது காய­ம­டைந்த பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். அதனால்,  கஸ்­ஸாமுக்கு அதிக இரத்தம் வெளி­யா­கிய பின்னர் இரவு பத்து மணிக்கே சிகிச்சை செய்­யப்­பட்­டது. இரண்டு சத்­திர சிகிச்­சைகள் செய்தும் பய­னில்­லா­ததால் மருத்­துவ ரீதி­யாக இரண்டு கால்­களும் வெட்­டி அகற்றப்பட்டன.

ஆறு மாத காலங்­க­ளுக்கு  தொடர் சிகிச்­சைகள் கஸ்­ஸாமுக்கு தேவைப்­ப­டு­கி­றது. அதன் பிறகு செயற்கைக் கால்கள் பொருத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­ப­டலாம்.

கஸ்ஸாம் ஒரு நடுத்­தரக் குடும்­பத்தைச் சேர்ந்­தவன். அவன் இவ்­வாறு பாதிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே அவ­னது குடும்பம் பல்­வேறு பொரு­ளா­தார சிக்­கல்­களை சந்­தித்து வந்­தது. கஸ்­ஸா­மு­டைய தந்தை சுகா­தார திணைக்­க­ளத்தில் வேலை செய்­த­போதும் 400 டொலர் பணத்­தையே வரு­மா­ன­மாக பெற்றார்.

கஸ்­ஸாமு­டைய இந்த நிலை­மைக்கு முன்னர் குடும்­பத்தின் அடிப்­படைச் செல­வு­களை மாத்­தி­ரமே பூர்த்தி செய்ய முடிந்­தது. இப்­போது அந்த செலவும் இரு மடங்­கா­கி­யுள்­ளது. பொது வைத்­தி­ய­சா­லையில் உள்ள குறை­பா­டுகள் கார­ண­மாக சில மருத்­து­வங்­க­ளுக்­காக தனி­யாரை நாட வேண்­டி­யி­ருந்­தது. இதற்­காக வேண்டி ஒவ்­வொரு வாரமும் 30– 50 டொலர் வரை­யான பணம் செல­வா­கிறது. மேலும் கஸ்­ஸாமு­டைய தனியார் வகுப்­புகள்,  போக்­கு­வ­ரத்து மற்றும் வாரத்தில் மூன்று முறை  மருத்­துவச் செலவு என ஏகப்­பட்ட செல­வா­னது.

இஸ்­ரே­லின் அடக்குமுறைகளால் காஸா வாழ் மக்­களுள் 38.8 சத­வீ­த­மான மக்கள் வறு­மைக்­ கோட்டின் கீழ் உள்­ள­தா­கவும் 45 சத­வீ­த­மான மக்கள் வேலை­யில்­லாமல் இருப்­ப­தா­கவும் ஐரோப்­பிய மனித உரி­மைகள்  கண்காணிப்பகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

நாங்கள் அமை­தி­யாக இருந்தோம்

ஜூன் 8 ஆம் திகதி, வஸீம் மஹ்மூத் எனும்15 வயது சிறுவன் ‘தப்கா’ எனும் நடனக் காட்­சியை பார்­ததுக் கொண்­டி­ருந்தான். அந்த இடம் எல்லைக் கோட்­டுக்கு வடக்கில் ஜப­ல­யாவின் அபூ ஸபியா மாவட்­டத்தில் “டெண்ட் சிடி” என அழைக்­கப்­படும் ஒரு இட­மாகும்.

காஸா­வுக்கும் இஸ்­ரே­லுக்கும் மத்­தியில் உள்ள வேலியில் இருந்து சுமார் 700 மீற்றர் தூரம்­ வரை காஸா எல்­லைக்கு செங்­குத்­தாக உள்ள டெண்ட் சிடி பகு­தியும் வேலி அகற்­று­ப­வர்­களால் குறி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

வஸீம் மஹ்மூத் அந்த நிகழ்ச்­சியை ர­சித்துப் பார்த்துக் கொண்­டி­ருந்தான். திடீ­ரென தனது வலது கால், உட­லுடன் இல்­லா­தது போன்­ற­தொரு உணர்வு ஏற்­பட்டு தன்னை மீறி தான் கீழே விழுந்­த­தாக அவன் கூறினான். ஆம்! அவன் ஒரு இஸ்­ரே­லிய ஸ்னைப்பர் ஒன்­றினால் சுடப்­பட்­டி­ருந்தான்.

“நாங்கள் அமை­தி­யா­கவே இருந்தோம், நாங்கள் அபாயம் ஏதும் ஏற்­படும் என எண்­ணி­யி­ருக்­க­வில்லை. அந்த ஒரு தருணம் எனது வாழ்க்­கை­யையே திசை திருப்பி விட்­டது” என்று மஹ்மூத் வஸீம் கூறுகிறான்.

அல் பனீன் பாட­சா­லையில் மஹ்மூத் தரம் 9 இல் கல்வி கற்­கிறான். இந்தப் பாட­சாலை இவ­னது வீட்டில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்­தி­லேயே அமைந்­துள்­ளது. இவன் தினமும் நடந்தே வகுப்­பு­க­ளுக்குச் செல்வான். ஆனால் இப்­போது வைத்­தி­யர்­களால் இவ­னுக்கு கால்­களில் உலோகம் பொருத்­தப்­பட்ட பின்னர் கரடு முர­டான பாதை­களில் நடக்க முடி­யாமல் போயுள்­ளது.

போக்­கு­வ­ரத்­துக்­காக டெக்­ஸி­களை பயன்­ப­டுத்­து­வதைப் பொறுத்­த­வ­ரையில் மஹ்­மூ­துக்கு அது சாத்­தி­யா­மா­ன­தல்ல. மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் அவ­னது தந்தை இறந்த பின்னர் அடிப்­படைச் செல­வு­களைச் செய்­யவே வரு­மானம் இன்­றிய நிலை காணப்­பட்­டது. ஓய்­வூ­தி­ய­மாக கிடைக்கும் 350 டொலர் மஹ்­மூ­து­டைய வாராந்த மருத்­துவ செல­வு­க­ளுக்கே சரி­யா­னது.

“நான் பாட­சா­லைக்குச் செல்ல வேண்டும். ஆனால் எனக்கு ஏற்­பட்­டுள்ள காயம் இதற்கு தடை­யாக உள்­ளது. வீட்டில் கல்வி கற்க எனது தாயார் உத­வு­கிறார்” என்று மஹ்மூத் கூறு­கிறான்.

சொந்த மண்­ணுக்கு திரும்பும் கனவு

மார்ச் முப்­பதாம் திகதி இஸ்­ரே­லியப் படை, காஸாவின் அபு ஸபியா பிர­தே­சத்தில் அரபாத் ஹர்ப் எனும் 15 வயது சிறு­வனின் அடி­வ­யிற்றில் துப்­பாக்­கியால் சுடப்­பட்­டது.

காஸா­வுக்கும் இஸ்­ரே­லுக்கும் இடையில் உள்ள வேலியை அதி­கா­ரிகள் அகற்றிக் கொண்­டி­ருந்­தார்கள். அதன்­போது அரபாத் அவர்­களை கடக்க முற்­பட்டான். இஸ்ரேல் பகு­திக்குள் அவன் வந்­ததால் சுடப்­பட்டான்.

“நான் எனது சொந்த மண்­ணுக்கு திரும்பிச் செல்­வ­தையே கன­வாகக் கொண்­டி­ருக்­கிறேன். அத­னா­லேயே அந்த வேலி­களை நான் கடந்து சென்றேன். நான் எதற்கும் பயந்­தவன் அல்ல! பலஸ்­தீனப் பகு­தியில் இருந்த ஒரு மருத்­துவ மத்­திய நிலை­யத்­துக்கு நான் சிலரால் கொண்டு வரப்­பட்டேன். 15 நிமி­டங்­க­ளுக்கு மேலாக எனக்கு இரத்தம் வழிந்­தோடிக் கொண்­டி­ருந்­தது” என்று அரபாத் தெரி­வித்தார்.

அரபாத் மீது துளைக்­கப்­பட்­டி­ருந்த தோட்டா அவ­னது முள்­ளந்­தண்டுப் பகு­தியை பல­மாக சேதப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. காஸாவின் பெய்த் லஹி­யாவில் உள்ள இந்­தோ­னே­சிய வைத்­தி­ய­சா­லையில் பல சத்­திர சிகிச்­சை­க­ளுக்கு அரபாத் உள்­ளாக்­கப்­பட்டான். அது காஸா எல்­லையின் வடக்கில் உள்­ளது. மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக எகிப்­துக்குச் செல்ல வேண்டும் என்று அர­பாத்­து­டைய தந்­தைக்கு பணிக்­கப்­பட்­டது.

அவ­னு­டைய தந்­தையின் மருத்­துவக் காப்­பு­றுதிப் பணம் போக்­கு­வ­ரத்துத் தேவை­க­ளுக்கு மட்டுமே போது­மாக இருந்­தது. ஆனால் 1700 டொலர் மேல­தி­க­மாக திரட்­டு­வது மிகவும் கடி­ன­மாக இருந்­தது.

அரபாத் எகிப்தில் 3 மாதம் தங்­கினார். இரண்டு சத்­திர சிகிச்­சை­க­ளுக்குப் பின்னால் காஸா­வுக்கு திரும்­பி­னார்கள். தொடர்ச்­சி­யாக பௌதீக மருத்­து­வத்தை தொடர்­வதால் குறைந்­தது ஒரு வரு­டத்தில் எலும்­புகள் சீரா­கலாம் என வைத்­தி­யர்கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளனர்.

அரபாத் ஷெய்க் ரெட்வான் மாவட்­டத்தில் தனது பெற்றோர் மற்றும் எட்டு சகோ­த­ரர்­க­ளுடன் வசிக்­கிறான். காஸா நக­ரத்தின் மேற்குப் பகு­தியில் உள்ள அத் தக்வா பாட­சா­லையில் பத்தாம் தரத்தில் கல்வி கற்­கிறான். சக்­கர நாற்­கா­லியைப் பயன்­ப­டுத்த முடி­யு­மாக இருந்­த­போ­திலும் அவ­னது உடல் பல­வீ­ன­மாகிக் கொண்டே வரு­கி­றது. அதற்கு அர­பாத்­து­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்பில் நான்­கா­வது மாடியில் இருப்­பதும் ஒரு காரணம்.

இந்தத் தாக்­கு­த­லுக்கு பின்னர் ஒழுங்­கான முறையில் பாட­சா­லைக்குச் செல்ல முடி­ய­வில்லை. கடந்த வருடப் பரீட்­சைகள் அர­பாத்­துக்கு தவ­ற­வி­டப்­பட்­டன.  தொழிற்­கல்வி நிறு­வனம் ஒன்றில் கல்­வியைப் பயின்று ஒரு தச்­ச­னா­கு­வதே தனது கனவு என அரபாத் தெரி­வித்­தி­ருந்தார்.

“எனக்கு சொந்­த­மாக ஒரு வேலைத் தளத்தை உரு­வாக்­கு­வதே கன­வாக இருந்­தது. ஆனால் எனக்கு ஏற்­பட்ட தாக்­கு­தலால் இரண்டு கல்­வி­யாண்­டுகள் தவ­ற­வி­டப்­பட்டுவிட்­டன” என்று அரபாத் தெரி­வித்­தி­ருந்தார்.

தந்­தையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மகன்

2004 ஆம் ஆண்டில் மொஹமட் சர்சூ­ரு­டைய தந்தை இஸ்­ரே­லிய வான் தாக்­கு­த­லினால் கொல்­லப்­பட்டார்.  2014  போரின்போது இஸ்ரேல் விமானங்கள் அவருடைய வீட்டின் மீது குண்டு மழை பொழிந்தன.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட மீளத்திரும்புவதற்கான போராட்டத்தில் தனது புனித பூமியின் விடுதலைக்காக தனது தந்தையை பிரதிநிதித்துவப்படுத்தி அதில் கலந்து கொண்டார். அவருக்கு வயது 14.  ஜூன் 8 இல் மலாக்காவில் வைத்து புறமுதுகில் சுடப்பட்டார்.

“இப்போது மொஹமட் கடுமையான முள்ளந்தண்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் நீண்ட நேரம் அமர முடியாது” என அவரது தாயார் அமீரா சர்சூர் தெரிவித்தார்.

“அவர் அசைவது கூட மோசமான பின் விளைவுகளைத் தருவதோடு நிரந்தர  அங்கவீனத்தை தோற்றுவிக்கலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

மொஹமட் தரம் 9 இல் காஸாவின் மேற்கிலுள்ள தாருல் அர்கம் பாடசாலையில் கல்வி கற்கிறார். அவரை பாடசாலைக்கு அனுப்ப அவரது தாயார் எடுக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. மணிக்கணக்கில் பாடசாலைக் கதிரையில் மொஹமட் அமர்ந்து கற்பது இலகுவான விடயமொன்றல்ல.

மொஹமட் எப்போதும் சக்கர நாற்காலியின் துணையின்றி நடக்கவும் ஓடவும் முயற்சி செய்வதுண்டு. வாராந்த மருத்துவ செயற்பாட்டுக்காக வேண்டி வாரத்தில் 2 நாள் பாடசாலை செல்வதில்லை.

நான் ஒரு வைத்தியராக வேண்டும். எனக்கு ஏற்பட்ட காயங்களால் நான் பல கஷ்டங்களுக்கு முகங் கொடுப்பதை அறிவேன். ஆனால் அந்தக் கஷ்டங்கள் ஒருபோதும் எனது இலட்சியத்தை அடைவதை தடுத்து நிறுத்தாது” என மொஹமட் கூறுகிறார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.