தனது காணியை பார்வையிடச் சென்றவரை தாக்கிய சம்பவம்: கிரான் பிரதேச சபை காணி உத்தியோகத்தர் மயூரன் கைது
தியேட்டர் உரிமையாளரை தேடி தொடர் விசாரணை
தனது காணியை பார்வையிடச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரை, தாக்கி மானபங்கப்படுத்தி அதனை காணொலி எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், கிரான் பிரதேச சபையின் காணி அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் மயூரன் என்பவரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. இந்த சம்பவத்தில் குறித்த காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியவர் என நம்பப்படும் பிரதேசத்தின் சினிமா கொட்டகையொன்றின் உரிமையாளரையும் கைது செய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பிரதேசத்தை விட்டு தலமறைவாகியிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் மேலும் தெரிவித்தது.
கடந்த 2 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் ஏறாவூரை சேர்ந்த அப்துல் காதர் எனும் காணி உரிமையாளர் கெம்மாந்துறை பகுதியிலுள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது, இந்த தாக்குதலுக்குள்ளானதாக ஏறாவூர் பொலிஸாருக்கு செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், குறித்த தினம் அப்துல் காதர் மீது தாக்குதல் நடாத்தப்ப்ட்டுள்ளமையும், அதனை கிரான் காணி அபிவிருத்தி உத்தியோகத்தர் மயூரன் உள்ளிட்ட இருவர் நடாத்தியுள்ளமையையும் கண்டறிந்தனர். அத்துடன் தாக்குதல் நடாத்தும்போது மயூரன், அப்துல் காதரின் சாரத்தை கழற்றி அவரது கழுத்தில் மாட்டியமையும் விசாரணைகளில் தெரியவந்த நிலையில், அவற்றை வீடியோவாக படம் பிடித்தவர் பிரதேசத்தின் சினிமா கொட்டகையொன்றின் உரிமையாளர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே கடந்த 4 ஆம் திகதி மயூரன் எனும் காணி உத்தியோகத்தர் சட்டத்தரணி ஒருவர் ஊடாக பொலிசில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றைய சந்தேக நபரைத் தேடி விசாரணைகள் தொடர்கின்றன.
இதற்கு முன்னரும் அப்துல் காதர் மீது 8 பேர் கொண்ட கும்பலொன்று தாக்குதல் நடாத்தி அச்சுறுத்தியமை தொடர்பில் ஏறாவூர் பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது. அதுதொடர்பில் இரு தரப்பினரையும் பொலிஸார் அழைத்து விசாரணை செய்து சமாதானம் செய்து வைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. அதுவும் காணிப் பிரச்சினையை மையப்படுத்தியதாக இருந்ததாக கூறிய பொலிசார், இந்த தாக்குதல் தொடர்பில் பூரண விசாரணைகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினர்.
-Vidivelli