வடக்கு, கிழக்கிற்கு தமிழ், முஸ்லிம் சமூக ஆளுநர்கள் நியமிப்பு வரவேற்கத்தக்கது

புதியதோர் அத்தியாயம் என்கிறார் ஹஸனலி

0 725

தமிழ்பேசும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அவர்களின் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் முதன்முறையாக ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளதானது வரவேற்கத்தக்கதோர் முன்னேற்றமாகும். நம் நாட்டில் மாகாண சபை ஆட்சிமுறை 1987இல் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடங்கி இன்றுவரையிலான கடந்த 31 வருடங்களாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களே இப்பதவிகளில் அமர்த்தப்பட்டு வந்துள்ளனர். அந்த நிலமை தற்போது மாறுபட்டுள்ளதனை நோக்கும்போது நம்பிக்கையூடடும் புதியதோர் அத்தியாயம் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவே ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கருதுகின்றது என அக்கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸனலி தெரிவித்தார்..

அதற்காக  ஜனாதிபதிக்கு  நாம் நன்றி பாராட்டுகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டபின்னர் ஏற்பட்டிருக்கும் ஒருவித சலசலப்பு நிலைமையில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நம்நாட்டில் வாழும் சகல இனங்களினதும் சம்மதத்துடன் முழுமையானதோர் அரசியல் யாப்பானது சட்டரீதியாக நிறைவேற்றப்பட்டு அமுலுக்கு வரும் வரை, சிறுபான்மை இனங்களின் வாழ்வுரிமை, தனித்துவ அடையாளம், இருப்பு என்பனவற்றைப் பாதுகாத்துக் கொள்ளவும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் தேவையான 22 முக்கிய அம்சங்களை இடைநிலை காப்பீடாக அடையாளம் கண்டு அவற்றை அண்மையில் காத்தான்குடியில் வெற்றிகரமாக் நடந்து முடிந்த அதன் பேராளர் மாநாட்டில் ஐக்கிய சமாதான முன்னணி நிறைவேற்றியிருந்தது. அந்தப் பட்டியலில் 12ஆம் மற்றும் 13ஆம் தீர்மானங்கள் வடக்கு கிழக்கு மாகாணசபை நிர்வாக நடைமுறை சம்பந்தப்பட்டவையாகும். அவை பின்வருமாறு :-

12, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்பேசும் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களினதும், மாவட்டங்களினதும், ஆளுநர்களும், மாவட்ட செயலாளர்களும் சரளமாகத் தமிழ் பேசுபவர்களாகவே இருக்க வேண்டும். வடகிழக்கு பிரதேசங்களில் பெரும்பான்மையாக பாரம்பரியமாக வாழ்ந்துவரும் சாதாரண குடிமக்கள் தங்களது பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளைப்பற்றி உயரதிகாரிகளுடன் சரளமாக உரையாடி நேரடியாகப் பரிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் அடிப்படை உரிமை தற்போது அவர்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 70 வருடங்களாகத் தொடர்ந்து வரும் இந்நிலமை களையப்பட்டு அடக்குமுறையிலிருந்து சிறுபான்மை தமிழ்பேசும் மக்கள் விடுவிக்கப்பட வேண்டுமென இச்சபை தீர்மானிக்கின்றது.

13, வடக்கு, கிழக்கு மாகாண நிர்வாகங்களிலுள்ள உயர்நிலை அரச மற்றும் திணைக்களப் பதவிகள் அனைத்தும் அந்தந்த மாகாணங்களில் வாழும் சமூகங்களின் இனப்பரம்பலுக்கு ஏற்ப பங்கிடப்பட வேண்டும். மிகவும் உயர்ந்த தகைமைகளையும் தராதரங்களையும் கொண்டுள்ள சிறுபான்மை சமூகத்தினர் தங்களது சொந்த மாகாண மற்றும் மாவட்ட நிர்வாகங்களில் உரிய பதவிநிலைகளில் அமர்த்தப்படாமல் அவர்களது தகைமைகளுக்குக் குறைந்த பதவிகளுக்கு  நியமனம் செய்யப்படுவதனை நாம் கண்டிக்கின்றோம். எனவே பாகுபாடான, நியாயமற்ற இவ்வாறான உரிமை மீறல்கள் உடனடியாகக் களையப்பட வேண்டும் என இச்சபை தீர்மானிக்கின்றது.

இவ்விரண்டு தீர்மானங்களும் முறையாக கடைப்பிடிக்கப்படும் பட்சத்தில் தமிழ்பேசும் இருசமூகங்களும் நமது மாகாணங்களில் சிறுபான்மையாக உள்ள சிங்களம் பேசும் சமூகமும் நமது பாரம்பரிய தாயகத்தில நிம்மதியாக் வாழ முடியும் என்பது எமது நம்பிக்கையாகும்.

புதிய ஆளுநர்கள் நியமனங்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவரும் இனரீதியான விஷம் கலந்த கருத்துக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.  தமிழ், முஸ்லிம் உறவுகள் எப்போதும் விரிசலாகவே தொடரவேண்டும் என விரும்புபவர்கள் இரவு பகலாக தூங்காது விழித்திருந்து தங்களது திட்டங்களை நிறைவேற்றப் புதுப்புது வியூகங்களை அமைத்து நம்மை வீழ்த்திக் கொண்டே இருக்கின்றனர். இதனைப்புரிந்து கொள்ளாமல் செம்மொழியால் பிணைக்கப்பட்ட நாம் சில்லறைப் பிரச்சினைகளை முதன்மைப் படுத்தி விஷம் கக்குவது நல்லதல்ல.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் உறவுகள் விரிசலாக உள்ளவரை இனப்பிரச்சினைக்கான சுமுகமான தீர்வுகள் ஒருபோதும் எட்டப்படமுடியாது. பிரச்சினைகளைத் தீர்க்க விரும்பாதவர்கள் இதனைத்தான் தங்களது அட்சரங்களாக வீசிக் கொண்டிருக்கின்றனர்.

இநத உண்மையைப் புரிந்து கொள்ளாவிட்டால் இரண்டு தரப்பினரது அப்பங்களும் மூன்றாம் தரப்பு பூனையால் கபளீகரம் செய்யப்பட்டுவிடும் என்பது மட்டும் உண்மையென அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.