மஹிந்த அதிகாரத்துக்கு வரவேண்டுமானால் இன, மதவாதிகளை தூரமாக்க வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டு

0 703

மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டுமென்ற எண்ணம் இருக்குமானால் அவருடன் சுற்றியிருக்கும் இன, மதவாதிகளை தூரமாக்கவேண்டும். இனவாத சிந்தனையிலிருந்து மீளாதவரை நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்ல முடியாதென ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டமூலம் மற்றும் ஆளொருவரின் இறப்புக்கான இழப்பீடுகளை அறவிடுதல் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டமூலம், ஐக்கிய நாடுகளுக்கு அதிகாரங்களை வழங்கவும் இராணுவத்தினரை தூக்கு மேடைக்கு கொண்டு செல்வதற்கும் கொண்டுவரப்பட்டதொன்றல்ல. எதிர்க்கட்சியில் உரையாற்றிய அனைவரும் இந்த சட்டமூலத்தின் அடிப்படை தெரியாமல் கதைக்கின்றனர். குறைந்தபட்சம் இதனை வாசித்தேனும் பார்க்காமலே வந்துள்ளனர்.

அத்துடன் எதிர்க்கட்சியினர் அரசியல் மேடைகளில் வழமையாக மக்களை உசுப்பேற்றுவதற்காக, இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்போவதாகவும் இனவாத்தை தூண்டியும் கதைப்பதுபோல் இன்றும் கதைக்கின்றனர். இவர்கள் ஒருபோதும் இந்த மன நிலையிலிருந்து மாறமாட்டார்கள். மஹிந்த ராஜபக் ஷவை கஷ்டத்தில் போட்டவர்களும் இவர்கள்தான். அதனால் மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டுமென்ற எண்ணம் இருக்குமானால் அவரை சுற்றியிருக்கும் இனவாதிகளை விலக்கிக்கொள்ள வேண்டும்.

மேலும் 2009இல் யுத்தம் நிறைவடைந்த பின்னர் அன்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனுடன்  மஹிந்த ராஜபக் ஷ ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டார். அந்த ஒப்பந்தமே தற்போது செயற்படுகின்றது. மஹிந்த ராஜபக் ஷ அமைத்த எல்,எல், ஆர்.சி. ஆணைக்குழுவின் பரிந்துரைகளே சர்வதேசத்தில் பேசப்பட்டு வருகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் எந்த இணக்கப்பாட்டையும் சர்வதேசத்துடன் மேற்கொள்ளவில்லை.

ஆனால் ஊடகவியலாளர் லசந்த, எக்னெலிகொட மற்றும் தாஜுதீன் ஆகியோரின் வழக்கு விசாரணைகள் முன்னேற்ற நிலைக்கு வந்துள்ளன. இதுதொடர்பாகவே இன்று மக்கள் பேசி வருகின்றனர். இவர்களின் கொலைகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பது தொடர்பில் மக்களுக்கு அறிய முடியுமாக இருக்கின்றது. அதேபோன்று ஜனாதிபதியை கொலை செய்யத்  திட்டமிட்டதாக தெரிவித்து நாமல் குமாரவினால் வெளியிடப்பட்ட குரல் பதிவுகளில் அவ்வாறான செய்திகள் இல்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிக்கின்றார். அதனால் பொலிஸுக்குப் பொறுப்பாக இருக்கும் ஜனாதிபதி, நாமல் குமாரவை கைதுசெய்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.