கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் வகையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் கவலைக்குரியதாகும்.
சில தினங்களுக்கு முன்னர் கிரான் பிரதேச சபைக்குட்பட்ட கொம்மாதுறை பிரதேசத்தில் அமைந்துள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்ற ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் வயோதிபர் ஒருவரை, கிரான் பகுதியைச் சேர்ந்த அரச காணி அதிகாரி ஒருவரும் அவரோடிருந்த குழுவினரும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதனோடு நிற்காது அவரது ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தியுள்ளதுடன் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டுள்ளனர்.
உண்மையில் இது மிகவும் வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாகும். மாத்திரமன்றி அப்பட்டமான மனித உரிமை மீறலுமாகும். அதுவும் அரச அதிகாரி ஒருவர் இதனை முன்னின்று செயற்படுத்தியிருப்பது மிகவும் பாரதூரமான விடயமாகும். இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்காலங்களில் இந்தியாவில் பதிவாகியிருந்தன. இன்று அதேபோன்ற மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள் இலங்கையிலும் இடம்பெறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். எனவேதான் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகலரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். இதேபோன்று மேலும் சில சம்பவங்கள் இப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்களுக்கிடையே கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டிருப்பதைப் பயன்படுத்தி சில சக்திகள் கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே முரண்பாட்டைத் தோற்றுவிக்க முனைவதையும் அவதானிக்க முடிகிறது.
ஹிஸ்புல்லாஹ்வின் நியமனத்திற்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் சிலர் முன்வைத்துள்ள கருத்துக்கள் இனவாதத்தை விதைப்பதாக உள்ளன. மாத்திரமன்றி ஹிஸ்புல்லாஹ்வின் நியமனத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இன்றைய தினம் கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகள் கிழக்கில் நிரந்தர தமிழ் முஸ்லிம் இன முறுகலுக்கு இட்டுச் சென்று விடுமோ எனும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது. வடக்கில் தமிழ் பிரமுகர் ஒருவரும் கிழக்கில் முஸ்லிம் பிரமுகர் ஒருவரும் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும். அந்தவகையில் ஜனாதிபதியின் இந்த தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும். இதனை ஏற்றுக் கொண்டு இவ்விரு மாகாணங்களிலும் பெரும்பான்மையாக வாழ்கின்ற தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து பயணிப்பதே வெற்றி தரும். மாறாக இந்த நியமனங்களை இன,மத ரீதியான கண்ணோட்டத்தில் பார்ப்பது ஆராக்கியமானதல்ல.
அந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்குமிடையே நேற்றைய தினம் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு ஒற்றுமையாக தீர்ப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.இவ்வாறான சந்திப்புகள் தொடர்ந்தும் நிகழ்வதன் மூலமாக இரு சமூகங்களுக்கிடையே நிலவும் வீணான சந்தேகங்களைத் தீர்க்க முடியும். இனவாத சக்திகளின் பொய்ப்பிரசாரங்களை முறியடிக்க முடியும்.
எனவேதான் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை எதிர்த்து நிற்பதையும் இனவாதப் பிரசாரங்களை முன்னெடுப்பதையும் விடுத்து, அவருடன் இணைந்து கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டியதே தமிழ் அரசியல் தலைமைகளின் கடப்பாடாகும். மாறாக கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவைச் சீர்குலைக்க விரும்புகின்ற உள்ளூர் மற்றும் சர்வதேச சக்திகளுக்கு துணைபோவது யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிழக்கை மேலும் படுகுழியில் தள்ளவே வழிவகுக்கும்.
அதேபோன்றுதான் இனவாத சக்திகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்காது கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு சமூக வலைத்தளங்களில் இரு தரப்பாரும் சண்டைபிடிப்பது ஆரோக்கியமானதல்ல. இது விடயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதே சிறந்தது. மேற்சொன்ன விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து செயற்படுவார்கள் என நம்புகிறோம்.
-Vidivelli