பிராந்தியத் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு விரும்பவில்லை எனத் தெரிவித்து கட்டாருக்கும் அதன் வளைகுடா அரபு அயல்நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர நெருக்கடியைத் தீர்த்து வைப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமெரிக்கத் தூதுவர் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து கட்டாருடனான இராஜதந்திர மற்றும் போக்குவரத்துத் தொடர்புகளை நான்கு அரபு நாடுகள் துண்டித்த நிகழ்வு இடம்பெற்று 18 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தன்னால் வளைகுடா நெருக்கடிக்குத் தீர்வுகாண முடியாது என்பதை உணர்ந்து கொண்டதையடுத்து அமெரிக்கத் தூதுவரான ஓய்வுபெற்ற கடற்படை ஜெனரலான அந்தோனி ஸின்னி தனது பதவியினை இராஜினாமா செய்ததாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஊடக நிறுவனமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை கட்டார் மறுத்துள்ளது.
நடந்துகொள்ள வேண்டிய விதம் அல்லது நடைமுறைப்படுத்துவதற்காக நாம் முன்வைத்த திட்டங்களை பிராந்தியத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்காததனாலேயே தான் பதவி விலக வேண்டியேற்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் முன்னாள் தளபதியான ஸின்னி தெரிவித்தார்.
அந்தோனி ஸின்னி தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார் என்பதை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் நிருவாகம் பிராந்தியத் தலைவர்களுடனான கலந்துரையாடல் உள்ளடங்கலான ஸின்னிக்கு ஒப்படைக்கப்பட்டு அவர் விட்ட இடத்திலிருந்து பணிகளைத் தொடரும் என ரொபர்ட் பல்லாடினோ தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் வொஷிங்டனில் இடம்பெறவிருந்த வளைகுடா நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி துருக்கியின் இஸ்தான்பூலிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் வைத்துக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அனைத்தும் தலைகீழாக மாறியதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
-Vidivelli