நாட்டுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவர்களே எங்களுக்குத் தேவை. அந்த வகையில் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக “அருணலு ஜனதா பெரமுன” அமைப்பின் தலைவர் டாக்டர் கிரிஷான்0 ராம சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை வருமாறு:
ஜனாதிபதியிடம் மிகவும் பணிவுடனும் கருணையுடனும் கேட்டுக்கொள்வது, இயலுமாயின் எங்கள் ஞானசார ஹாமுதுருவை விடுதலை செய்யுங்கள். நீங்கள் சகல அதிகாரங்களும் பெற்றுள்ள ஒரு ஜனாதிபதி. அதனால் உங்களால் இதனை சாத்தியப்படுத்தலாம்.
எங்கள் ஹாமுதுரு, பெரிய தவறெதுவும் செய்யவில்லை அவர் இந்நாட்டுக்காகவும் சிங்களவர்களைப் போன்றே தமிழ் மக்களுக்காகவும் சிறுபான்மை இனத்திற்காகவும் போராடியவர். யாழ்பாணம், கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களில் ஹிந்து பக்திவான்களுக்கு பிரச்சினைகள் எழுந்தபோது, அவர் ஸ்தலத்துக்குச் சென்று போராடி காப்பாற்றியுள்ளார். நான் அன்னாரின் நண்பனோ, தனிப்பட்ட ரீதியில் ஆதரவாளனோ அல்ல. ஆனாலும் அவருக்கு நீதியொன்று வழங்கப்பட் வேண்டும். அவர் கொலை போன்ற பெரிய தவறு எதுவும் இழைக்கவில்லை. அவர் நாட்டுக்காகவே கோஷம் எழுப்பியுள்ளார். அதனால் ஆறு வருடங்கள் சிறைவாசம் என்பது அநீதியானதாகும்.
உங்களை ஜனாதிபதியாக நியமிப்பதற்காக உமது அருணலு ஜனதா பெரமுன கட்சி கூடிய அர்ப்பணிப்பு செய்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் அமோக வெற்றியீட்டுவதற்கு எங்கள் கட்சி மகத்தான பங்களிப்புச் செய்துள்ளது. நாங்கள் உங்களிடம் வேறெதுவும் கோருவதற்கில்லை. முடியுமானால் எங்கள் ஞானசார ஹாமுதுருவை எங்களுக்கு விடுதலை செய்து தாருங்கள். அவர் இந்நாட்டில் இருக்க வேண்டிய ஒருவர். சில வேளை அவர் சற்று கடுந்தொனியில் உரைத்திருக்கலாம் அதனைத் தவறு என்று நாம் காணவில்லை.
மட்டக்களப்பில் இந்து மக்களுக்காக சிலையொன்று திறக்க முடியாதிருந்த சந்தர்ப்பத்தில் ஞானசார ஹாமுதுரு தலையிட்டு அதனைப் பெற்றுத்தந்ததாக தமிழ் இந்து பக்திவான்கள் கூறுகிறார்கள். யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் கூட ஞானசார தேரர் தொடர்பாக தவறான கருத்துக்கள் ஏதும் இல்லை அவர் சரியானவர் என்றே அவர்கள் கூறுகிறார்கள்.
-Vidivelli