ஹஜ் யாத்திரை – 2019 உப முகவர், தரகர்களிடம் பணத்தை கொடுக்காதீர்கள்
கடவுச் சீட்டையும் கையளிக்காதீர் என்கிறது ஹஜ் குழு
இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பவர்கள் தங்களது கடவுச் சீட்டுக்களையோ, பணத்தினையோ உபமுகவர்களிடம் அல்லது தரகர்களிடம் வழங்க வேண்டாமென அரச ஹஜ் குழு அறிவுறுத்தியுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இவ்வருடம் நியமனம் வழங்கப்பட்டுள்ள ஹஜ் முகவர்களையே ஹஜ் கடமைக்காக தொடர்பு கொள்ளும்படியும் வேண்டியுள்ளது.
இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகளுக்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 92 ஹஜ் முகவர்கள் நியமனம் பெற்றுள்ளார்கள். அவர்களது பெயர் விபரங்கள் விரைவில் பத்திரிகைகள் வாயிலாக அறிவிக்கப்படும்.
ஒருசில உபமுகவர்கள் ஹஜ் கடமைக்கு திட்டமிட்டுள்ளவர்களிடம் கடவுச்சீட்டுக்களையும், முற்பணங்களையும் பெற்று வருவதாக புகார்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முகவர் நிலையங்களைத் தவிர வேறு எவருக்கேனும் முற்பணம், கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டால் அதற்கு திணைக்களமோ அரச ஹஜ்குழுவோ பொறுப்பேற்க மாட்டாது.
அங்கீகரிக்கப்பட்டுள்ள ஹஜ் முகவர் நிலையங்களின் பெயர் விபரங்களுடன் அவர்களது ஹஜ் கட்டணம் என்பன விளம்பரப்படுத்தப்படும். ஹஜ் பயணிகள் தாங்கள் விரும்பிய முகவர் நிலையங்களைத் தெரிவு செய்துகொள்ளலாம் என்றார்.
-Vidivelli