மனிதக் கடத்தலை முற்றாக ஒழிப்போம்

0 815

தேவைகளுக்காக மனிதர்களைக் கடத்தும் செயல் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதக் கடத்தல்கள் தொடர்பில்  2018 ஆம் ஆண்டிற்கான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. அதில், ”மனிதக் கடத்தல்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகள் அவர்களது பொருளாதாரத் தேவைகளுக்காக பெண்களையும், குழந்தைகளையும் கடத்துகின்றனர். மேலும் உடல் உறுப்புகளைத் திருடுவதற்காகவும் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடத்தப்படுபவர்களில் 70 சதவீதமானோர் பெண்களாவர்.

கடத்தப்பட்டவர்கள் பாலியல் துன்புறுத்தல், பலவந்த வேலை, பிச்சை எடுப்பதற்காக வற்புறுத்தப்படுகின்றனர். மனிதக் கடத்தல்கள் தொடர்பில் 2003 முதல் 2016 வரை கிட்டத்தட்ட 2 இலட்சத்துக்கும் அதிகமான  முறைப்பாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடத்தல் சம்பவங்களுக்கு எதிராகப் போதிய நடவடிக்கைகள் எடுக்காத நாடுகளில் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. கடந்த 7 ஆண்டுகளில் கடத்தல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 2016 ஆம்  ஆண்டில் கடத்த 13 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன’ என்றும் ஐ.நா.வின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரை பங்களாதேஷ், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தே அதிகமானோர் கடத்தப்படுகின்றனர். எனினும் நேபாளம் மற்றும் இலங்கையிலிருந்து கடத்தப்படுவோரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவானதாகும் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டுகளில் இலங்கை மனிதக் கடத்தல்களைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது. ” மனிதக் கடத்தல்கள் தடுப்பதற்கான கடப்பாடுகளை இலங்கை முழுமையாக நிறைவேற்றவில்லை எனவும், ஆண்கள், பெண்கள், சிறார்கள் ஆகியோர் கட்டாய வேலைவாங்கல், மற்றும் பாலியலுக்காக கடத்தப்படுவதில் இலங்கை ஒரு மூலமாக இருப்பதாகவும் மனிதக் கடத்தல்கள் தொடர்பான அமெரிக்காவின் 2011 ஆம் ஆண்டின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும் கடந்த வருடம் அதாவது 7 வருடங்களின் பின்னர் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையின் படி இலங்கை இந்த விடயத்தில் போதுமான முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. மனிதக் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் மனிதக் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கான உடன்படிக்கையிலும் இலங்கை விரைவில் கைச்சாத்திடவுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

இருந்தபோதிலும் இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் பெற்றுச் செல்லும் பெண்களில் கணிசமானோர் காணாமல் போகின்ற விவகாரம் தொடரவே செய்கிறது. இவ்வாறு காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான முயற்சிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொண்டு வருகின்ற போதிலும் இந்த அவல நிலை நீடிக்கவே செய்கிறது.  மத்திய கிழக்கு நாடுகளுடனான தொழில் உடன்படிக்கை உரிய முறையில் அந்நாடுகளால் பின்பற்றப்படாமையே இதற்குக் காரணமாகும்.

எனவேதான் இலங்கை அரசாங்கம் மனிதக் கடத்தல் விடயத்தில் போதுமான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது போன்றே எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளுக்குச் சென்று காணாமல்போகின்ற அப்பாவி இலங்கைத் தொழிலாளர்கள் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டியது அவசியம் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.