அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை இந்த மாதத்திலிருந்து 2500 ரூபாவுக்கும் 10 ஆயிரம் ரூபாவுக்கும் இடையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் அரச சேவையிலுள்ள ஆரம்ப தர ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 2500 ரூபாவாலும் உயர் பதவியிலுள்ள ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வாக 10 ஆயிரம் ரூபாவினை வழங்கியதுடன் அந்தக் கொடுப்பனவினை 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரையி லான காலப்பகுதிக்குள் அடிப்படைச்சம்பளத்துடன் இணைப்பதற்குத் தீர்மானித்திருந்தது.
இந்தத் தீர்மானத்திற்கமைவாக அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 2019 ஜனவரி மாதத்திலிருந்து 2500 ரூபா முதல் 10 ஆயிரம் ரூபாவரையில் அதிகரிக்கப்படவுள்ளது. அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் இறுதிக் கட்டமாக 2020 ஆம் ஆண்டிலும் அதிகரிக்கப்படவுள்ளது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அரச ஊாழியர்களின் அடிப்படைச் சம்பளம் தற்போது நூற்றுக்கு 85 வீதமாக அதிகரித்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் ஆரம்பதர அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 11730 ரூபாவாக இருந்தது. இது இந்த வருடம் 21,745 ரூபாவாக அதிகரித்துள்ளது எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் உயர் பதவி வகிக்கும் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ள தாகவும் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-Vidivelli